கிவுல்ஓயா திட்டத்தை கைவிடுங்கள் : சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்து
தமிழ் மக்களின் காணிகளைப் பறித்து அரசாங்க அனுசரணையுடன் தமிழ் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள கிவுல்ஓயா திட்டம் முழுமையாகக் கைவிடப்பட வேண்டும் என்று ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அநுர அரசை வலியுறுத்துகின்றது.
இது தொடர்பில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் (Suresh Premachandran) விளக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், வவுனியா வடக்கு பிரதேசத்தையும் முல்லைத்தீவு மணலாறு பிரதேசத்தையும் உள்ளடக்கக்கூடிய வகையில் 23,456 மில்லியன் ரூபாய் செலவில் கிவுல்ஓயா என்ற ஒரு நீர்ப்பாசனத் திட்டத்திற்கான அணைக்கட்டு ஒன்றைக் கட்டுவதற்கு இப்பொழுது ஆட்சியில் உள்ள அநுரகுமார அரசானது 2500 மில்லியன் ரூபாவை முதல் கட்டமாக ஒதுக்கியுள்ளது.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலம்
இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் இவ்வேலைத்திட்டமானது 2031ஆம் ஆண்டு முடிவுறுத்தப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது. இத்திட்டம் 2011ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் மகாவலி எல் வலயத்துடன் இணைந்ததாக உருவாக்க முயற்சி செய்தபோதும் பின்னர் அது கைவிடப்பட்டது.
இப்பொழுது இந்த அரசாங்கம் மீண்டும் அதே திட்டத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. தமிழ் மக்களுக்குச் சொந்தமான பல்வேறுபட்ட குளங்கள், வயல்களை உள்ளடக்கி ஏற்கனவே மணலாற்றுப் பிரதேசத்தை சிங்களமயமாக்கி அதற்கு வெலிஓயா என்று பெயரும் சூட்டப்பட்டு வெளிநாட்டிலிருந்து நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக அது மகாவலி எல் வலயம் என்று பெயரும் சூட்டப்பட்டது.

இந்த மகாவலி எல் வலயத்திற்கு எந்தகாலத்திலும் மகாவலி நீர்வரமாட்டாது என்பதை மகாவலி அதிகாரசபையின் உயர் அதிகாரிகளே நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றில் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
யுத்தத்தின் பின்னர், இதனை ஒட்டிய பிரதேசங்களில் உள்ள கொக்கச்சான்குளம் என்ற கிராமம் போகஸ்வெவ என்றும் அதனையொட்டி மற்றொரு கிராமத்திற்கு நாமல்புர என்று பெயரும் சூட்டப்பட்டு அம்போந்தோட்டை, மாத்தளை போன்ற தூரத்திலிலுள்ள சிங்கள பிரதேசங்களிலிருந்து சிங்கள மக்கள் அழைத்துவரப்பட்டு குடியேற்றப்பட்டுள்ளனர்.
இப்பொழுது கிவுல்ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தின் மூலம் தமிழ் மக்கள் விவசாயம் செய்துவரும் பதினைந்துக்கும் மேற்பட்ட சிறிய குளங்களும் அதனை ஒட்டிய வயல் நிலங்களும் வவுனியா வடக்கில் உள்ள பல பழந்தமிழ் கிராமங்களும் அதன் குளங்களும் வயல்நிலங்களும் கிவுல்ஓயாவின் நீரேந்தும் பிரதேசத்திற்குள் மூழ்கடிக்கப்போகின்றது.
இதன் காரணமாக ஏற்கனவே வாழ்வாதாரங்களை இழந்து சிறுகச்சிறுக தமது விவசாயத்தை மேற்கொண்டுவரும் தமிழ் மக்களை மீண்டும் விரட்டியடிக்கும் நிலை தோன்றியுள்ளது.
கடற்தொழில் அமைச்சர்
முன்னர் இருந்த அரசாங்கங்கள், முல்லைத்தீவு, வவுனியா மாவட்டத்தின் எல்லைப் பிரதேசங்களை சிங்களமயமாக்கும் நோக்குடன் ஏற்படுத்திய குடியேற்றங்கள் இப்பொழுது இந்த ஆட்சியின் கீழ் விஸ்தரிக்கப்பட்டு, மகாவலி நீர் வராத பொழுதும் கிவுல்ஓயா என்ற புதிய நீர்ப்பாசனத்திட்டம் ஒன்றை உருவாக்கி, மிச்சம் சொச்சமாக அங்கு வாழ்ந்துவரும் தமிழ் மக்களையும் வெளியேற்றுவதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
“இத்திட்டம் இன அடிப்படையில் முன்னெடுப்பதாகக் கூறப்படுவது தவறானது. அரசியல் உள்நோக்கம் கொண்டது. தேசிய அபிவிருத்தி, விவசாய வளர்ச்சி, நீர்வள முகாமைத்துவம் இவைகளை முன்வைத்தே அரசாங்கம் இத்திட்டத்தை செயற்படுத்துகின்றது.

எமது அரசாங்கத்தில் இனவாதம், மதவாதம் இல்லை. மக்களை சமமாகக் கருதுகின்றோம். தமிழ் மக்களின் நிலவுரிமை, சமூக உரிமை பாதூக்கப்படும். சட்டத்திற்கு முரணாக நிலம் கையகப்படுத்தல் நடைபெறமாட்டாது. திட்டம் தொடர்பாக சகல நடவடிக்கைகளும் உரிய சட்ட நடைமுறைகளின் கீழேயே நடைபெறும்” என்று கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகர் திருவாய் மலர்ந்திருக்கிறார்.
இலங்கையின் முதலாவது பிரதமராக இருந்த டி.எஸ். சேனநாயக்க தொடக்கம், இன்றிருக்கின்ற ஜேவிபி அரசாங்கம் வரையில் விவசாய அபிவிருத்தி, அதற்கான நீர்ப்பாசனத் திட்டங்கள் என்ற போர்வையில் வடக்கு-கிழக்கில் பல்லாயிரக்கணக்கான சிங்கள மக்களை வலிந்து குடியேற்றியதனூடாக அந்தப் பிரதேசத்தில் வாழும் தமிழ் குடிப்பரம்பலை மாற்றியமைத்து.
அந்த பிரதேசங்களில் பெரும்பான்மையாக வாழ்ந்த தமிழ் மக்களை சிறுபான்மையினராக்கி பாராளுமன்றத்தில் தமிழர்கள் தமது பிரதிநிதித்துவத்தை இழக்கக்கூடிய அளவிற்கு இந்த குடியேற்றங்கள் நடந்துள்ளன. இப்பொழுதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
அமைச்சரவை அமைச்சராக இருக்கின்ற தமிழரான சந்திரசேகர் போன்றவர்களுக்கு இந்த வரலாறு தெரியாமல் இருக்கலாம். இவர் கூறுகின்ற சட்டத்திற்கு முரணாக எதுவும் செய்யப்பட மாட்டாது என்பதும் சட்ட நடைமுறைகளுக்கு இணங்கவே இத்திட்டம் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதும் தமிழ் மக்களின் காதுகளில் பூச்சுற்றும் வேலை.
புதிய நீர்ப்பாசனத்திட்டம்
இவர் இங்கு எந்த சட்டத்தைப் பேசுகிறார், இதுவரை காலமும் ஆட்சி செய்து வருகின்ற அரசாங்கங்கள் தமக்கு ஏற்ற வகையில் நில அபகரிப்பை மேற்கொள்வதைதான் சட்ட நடவடிக்கை என்று சொல்கிறாரா, இது ஒரு இனவாத நடவடிக்கை அல்ல என்றும் இவர் நிரூபிக்க பகீரதப்பிரயத்தனம் செய்கிறார்.
பழந்தமிழ் கிராமங்களை நீரில் மூழ்கடித்து, புதிதாக உருவாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்களுக்கு நீர்ப்பாசனம் வழங்குவதும் புதிய சிங்கள குடியேற்றங்களை உருவாக்குவதும் இனவாதம் என்றில்லாமல் வேறு எப்படி இதனை அழைப்பது.
எம்மைப் பொறுத்தவரையில், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டத்தின் குடிசனப் பரம்பலை மாற்றியமைக்கக்கூடிய தமிழ் மக்களை மீண்டும் அந்த மண்ணிலிருந்து விரட்டியடித்து ஏதிலியாக்கக்கூடிய இந்த நீர்ப்பாசனத்திட்டம் நிறுத்தப்பட வேண்டும்.

தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிலங்கள் பறிபோவதை பார்வையாளர்களாக இருந்து பார்த்துக்கொண்டிருப்பது ஏற்புடைய விடயமல்ல.
நாளை உங்களது சந்ததியினரும் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு வாக்களித்த மக்களின் நலன் சார்ந்தும் உங்களின் வருங்கால சந்ததியினரின் நலன் சார்ந்தும் இத்தகைய நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த வேண்டியது உங்களது கடமையும் பொறுப்புமாகும்.
சந்திரசேகர் போன்ற தமிழ் அமைச்சர்கள் மீண்டும் மீண்டும் நாங்கள் இனவாதிகள் அல்ல மதவாதிகள் அல்ல என்று கூறுவதற்குப் பதிலாக அரசாங்கம் முன்னெடுக்கும் இத்தகைய இனவாத நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த முன்வரவேண்டும்.
மாறாக நீங்களும் அமைச்சரவையில் இணைந்து இவைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதும் இத்தகைய திட்டங்களுக்கு வக்காளத்து வாங்குவதும் வருந்தத்தக்கது.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்லாயிரம் மில்லியன் ரூபாய்களுக்குக் கடனாளியாகி நாட்டை வங்குரோத்தில் வைத்திருக்கும் நீங்கள், சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிறுவுகின்ற நோக்கில் மேலும் 23,456மில்லியன் ரூபாயை செலவு செய்ய முற்படுகிறீர்கள் என்றால் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும் நாட்டில் அபிவிருத்தியையும் எவ்வாறு கொண்டு வருவீர்கள்.
உண்மையில் ஜனாதிபதி நாட்டின் ஒருமைப்பாட்டையும் மக்களிடையே நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த விரும்பினால் இத்திட்டத்தை முற்றுமுழுதாகக் கைவிடவேண்டும் என்று கோருகின்றோம்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |