முல்லைத்தீவு சிறுமியின் சர்ச்சைக்குரிய மரணம் : ரவிகரன் எம்.பியின் அறிவிப்பு
முல்லைத்தீவு - சிலாவத்தைப் பகுதியைச் சேர்ந்த சிறுமி குகநேசன் டினோஜாவின் சர்ச்சைக்குரிய மரணம் தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் (T. Raviharan) கருத்து வெளியிட்டுள்ளார்.
அதன்படி, குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு நீதி நிலைநாட்டப்படுமென சுகாதார அமைச்சர் தம்மிடம் உறுதியளித்துள்ளதாக ரவிகரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் நேற்று (25) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சர் உறுதி
நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்றக் குழுவிற்கும், சுகாதார அமைச்சருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே சுகாதார அமைச்சர் இந்த உறுதியை வழங்கியதாகவும், துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு சிலாவத்துறை பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் 21ஆம் திகதி, உணவு ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, திடீரென உயிரிழந்தார்.
சிறுமியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்து, அவரின் உறவினர்கள் துறைசார் அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்தநிலையில் சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் 29ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |