தனி நாடு அல்ல - கொழும்பு மாவட்டத்தின் ஒரு பகுதியே துறைமுக நகரம்
கொழும்பு துறைமுக நகரம் கொழும்பு மாவட்டத்தின் ஒரு பகுதியாகும் என்று இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டுமா, இல்லையா என்பதை உச்ச நீதிமன்றமே தீர்மானிக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்த சட்டமூலம் சாதாரண சட்டமூலம் என்பதால் இதனை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் தெரிவித்த அவர்,
சட்டமூலம் நாட்டில் வேறு நாட்டை உருவாக்குவதாக முன்னெடுக்கப்படும் பிரசாரத்தை முற்றாக நிராகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை குடியரசிற்கு சொந்தமான நிலப்பரப்பு எப்பொழுதும் இலங்கை வசமே இருக்கும். அதன்படி, கொழும்பு துறைமுக நகரம், கொழும்பு மாவட்டத்தின் ஒரு பகுதியாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
துறைமுக நகரத்தின் நிதி விவகாரங்கள் இலங்கையின் கணக்காய்வாளர் நாயகத்தினால் மேற்பார்வையிடப்படுவதாகவும், எனவே அங்கு சட்டவிரோத நிதி நடவடிக்கைகளுக்கு இடமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
துறைமுக நகரம் ஒரு தனி நாட்டு கொள்கைக்கு வித்திடாது என்றும் அது இலங்கையின் ஒரு பகுதி என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
துறைமுக நகரத்தை மையமாகக் கொண்டு இலங்கையில் ஒரு சர்வதேச மத்தியஸ்த மத்திய நிலையமொன்று அமைக்கப்படும் என்றும், இதனூடாக வலய நாடுகளில் மத்தியஸ்த சட்ட விடயங்களுக்கு சிங்கப்பூருக்கு செல்லாது இங்கு மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
இதனூடாக நாட்டில் உள்ள சட்ட வல்லுநர்களுக்கு அந்நிய செலாவணியைப் பெற முடியும் என்றும் அவர் கூறினார்.
துறைமுக நகரத்தில் உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்ய வாய்ப்பு இருக்கிறதா என்று ஊடகங்கள் கேட்டபோது, வெளிநாட்டு தொழில் செய்யும் அல்லது வெளிநாட்டு நாணயத்தை சம்பாதிக்கும் உள்ளூர் தொழில்முயற்சியாளர்களுக்கு இந்த துறைமுக நகரத்தில் இடம் உள்ளது என்று அமைச்சர் கூறினார்.