பாடசாலை மாணவி பாலியல் வன்புணர்வு! மாணவிக்கு நேர்ந்த கொடூரம்
வன்புணர்வு
எஹலியகொட பிரதேசத்தில் பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்து கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் 13 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2009 ஆம் ஆண்டு எஹலியகொட, எல்லாவல பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்து கொலை செய்த சந்தேகநபர் ஒருவர் DNA பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டமையே இதற்குக் காரணமாகும்.
13 வருடங்களில் இந்தக் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மற்றுமொருவர் இன்னமும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
படுகொலை - மாடு மேய்த்தவர் கைது
2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் திகதி பியூமி மாதவிகா ஜயசிங்க என்ற 15 வயதுடைய பாடசாலை மாணவி, பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது கடத்தப்பட்டு, வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
வன்புணர்வு செய்த பின்னர், மாணவியின் தலையில் அடித்து, எல்லாவல பிடகந்த பிரதேசத்தில் உள்ள மலை உச்சியில் இருந்து கீழே வீசியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அதற்கமைய, உரிய காலத்தில், விசாரணை நடத்திய காவல்துறையினர் அப்பகுதியில் மாடு மேய்த்து வந்த காமினி என்ற நபரை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
இறந்த சிறுமியின் உடலில் காணப்பட்ட முடியின் DNA மற்றும் சம்பந்தப்பட்ட நபரின் DNA மாதிரிகளை ஒப்பிட்டுப் பார்த்ததே இதற்குக் காரணமாகும்.
சிறிது காலங்களின் பின்னர் குறித்த நபருக்கு நீதிமன்றம் பிணை வழங்கிய போதிலும், பிணை வழங்குவதற்கு எவரும் முன்வராத காரணத்தினால் அவர் சுமார் 13 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
படுகொலை - உண்மையான கொலையாளி கைது
13 ஆண்டுகளுக்குப் பிறகு, பாடசாலை மாணவியின் உண்மையான கொலையாளி தற்செயல்களாக கிடைத்த DNA மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டு எஹலியகொட தித்தெனிய பிரதேசத்தில் வசிக்கும் 90 வயதான மூதாட்டி ஒருவரை கொலை சம்பவம் தொடர்பில் பிரேமசிறி சேனாரத்ன என்ற நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த காமினியை, பிரேமசிறி சேனாரத்ன சந்தித்துள்ளார். “நான் செய்த தவறுக்கு தண்டனையை நீங்க அனுபவிக்கின்றீர்கள். நான் தான் மாணவியை கொலை செய்தேன்” என பிரேமசிறி தெரிவித்துள்ளார்.
அந்த உரையாடலை ஊழல் ஒழிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற மற்றொரு சந்தேக நபரான எஹெலியகொட பகுதியைச் சேர்ந்த ஒருவர் கேட்டுள்ளார்.
சிறைச்சாலையில் இருந்து பிணையில் வந்த அவர் மீண்டும் எஹலியகொட காவல்துறையினரால் ஊழல் ஒழிப்புச் சோதனையில் கைது செய்யப்பட்டார்.
சிறைச்சாலையில் தான் கேட்ட கதையை கட்டளைத் தளபதி பிரதம காவல்துறை பரிசோதகர் உதயசாந்தவிடம் சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஒத்துப்போன விந்தணு மாதிரிகள்
அதற்கமைய, 2019ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் திகதி தித்தெனிய பிரதேசத்தில் முதியவர் ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரேமசிறி சேனாரத்ன என்ற சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பிரதான காவல்துறை பரிசோதகர் அவரது விந்தணுவை DNA பரிசோதனைக்கு அனுப்பிவைத்தார்.
2020ஆம் ஆண்டு 18ஆம் திகதி அன்று கிடைக்கப்பெற்றதுடன், எல்லாவல பிரதேசத்தில் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட பாடசாலை மாணவியின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட விந்தணு மாதிரிகளுடன் இது ஒத்துப்போவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
டி.என்.ஏ அறிக்கை கிடைக்கப்பெற்ற போது சந்தேக நபர் பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும், அவர் எஹலியகொட நியன்கொல பிரதேசத்தில் மறைந்திருந்த நிலையில் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
கொலையாளி வாக்குமூலம்
மாணவி மீது அதிக விருப்பம் இருந்ததால் அவரை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், பின்னர் கத்தியால் அடித்து கொன்று மலையில் வீசியதாகவும் காவல்துறையினர் விசாரணையில் சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சந்தேகநபர் தான் வன்புணர்வு செய்து கொலை செய்த இடத்தையும் காவல்துறையினரிடம் காண்பித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
39 வயதுடைய சந்தேகநபர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பதுடன் கொலைச் சம்பவத்தின் போது 26 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் 13 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள காமினி என்ற நபர் மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.
அதற்கமைய பியுமி மாதவிகா கொலையின் உண்மையான குற்றவாளி என கண்டுபிடிக்கப்பட்ட நபர் அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.