இன்று அதிகாலையில் நடந்த கோர விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி (படங்கள்)
தம்புத்தேகம ஈரியகம பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்ததுடன் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று(04) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்

குருநாகலில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியோரத்தில் நிற்க தயாரான போது, அதே திசையில் பயணித்த வான் ஒன்று லொறியின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உள்ளடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பெண்கள் 36 மற்றும் 43 வயதுடையவர்கள் எனவும் ஆண்கள் 36 மற்றும் 46 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் கஹட்டலஸ்திகிலிய பிரதேசத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் 55, 11, 06 மற்றும் 08 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
அதிக வேகத்துடன் வானை ஓட்டி வந்த சாரதியினால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் லொறியுடன் மோதியதனால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.