ஆற்றில் கவிழ்ந்த எரிபொருள் ஊர்தி - சாரதியின் நித்திரையால் விபரீதம்
ஹலவத்தை - புத்தளம் வீதியில் பட்டுலு ஆற்றின் வழியே எரிபொருள் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து இன்று (24) அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக முந்தலம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் - கைத்தொழில் நகரமான காலடிக்கு எரிபொருள் எண்ணெயை ஏற்றிச் சென்ற குறித்த வாகனம் கொழும்பு நோக்கித் திரும்பும் போதே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சாரதி சிகிச்சை
ஹலவத்தை - புத்தளம் வீதியில் பட்டுலு ஆற்றில் குறுக்கே உள்ள பாதுகாப்பு வேலியையும் உடைத்துகொண்டு ஆற்றில் விழுந்துள்ளது.
விபத்துக்குள்ளான ஓட்டுநரை மீட்கும் பணியில் பிரதேசவாசிகளும் காவல்துறையினரும் இணைந்து செயற்பட்டுள்ளார். சிறு காயங்களுக்கு உள்ளான சாரதி சிகிச்சைக்காக ஹலவத்த பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பட்டுலு ஆற்றின் பாலத்தின் பாதுகாப்பு வேலியும் உடைக்கப்பட்டுள்ளதுடன், ஓயாவில் உருண்டு விழுந்த கனரக வாகனம் 100 மீற்றர் தூரம் நீரினால் கொண்டு செல்லப்பட்டு ஹலவத்தை - புத்தளம் புகையிரத பாதையின் குறுக்கே உள்ள கறுப்பு பாலத்தின் அடியில் நின்றுள்ளது.
சாரதியின் நித்திரையால் இவ்விபத்து நேர்ந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

