ரணிலை படுகொலை செய்யுமாறு வெளியான பதிவால் சர்ச்சை!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வைத்தியசாலையில் வைத்தே கொலை செய்யுமாறு வெளியிடப்பட்ட சமூக ஊடக பதிவொன்றுக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணத்திற்காக அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக ஓகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கவை படுகொலை செய்ய வலியுறுத்தி சமூக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பாக கடுவெல பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் பிரபாத் தர்ஷன உள்ளிட்ட சிலர் இன்று சிஐடியில் முறைப்பாடு செய்துள்ளனர்.
கைது செய்ய கோரிக்கை
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரபாத் தர்ஷன, வைத்தியசாலையில் இருக்கும் போது ரணில் விக்ரமசிங்கவை படுகொலை செய்யக் கோரி சமூக ஊடகங்களில் ஒரு செய்தி பரப்பப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அத்தகைய செய்திக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

