இலங்கை கடற்பரப்பில் ஈரானிய போர் கப்பல் மீது தாக்குதல்...!
🛑 புதிய இணைப்பு
இலங்கையின் கடல் எல்லைக்குள் விபத்துக்குள்ளானதாக கருதப்பட்ட ஈரானியக் போர் கப்பல் நீர் மூழ்கி கப்பல் ஒன்றால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாக்குதல் நடத்தப்பட்டதில் குறைந்தது 101 பேர் காணாவில்லை என்றும், 78 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் இலங்கை அரசை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என கூறப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்காத நிலையில் இலங்கை கடற்படை குறித்த தகவலை முற்றாக நிராகரித்துள்ளது.
🛑 முதலாம் இணைப்பு
இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் மூழ்கும் தருவாயில் ஆபத்தான நிலையில் காணப்பட்ட ஈரானியக் போர் கப்பலிலிருந்து 35 பேர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் ஈரான் நாட்டுக்குச் சொந்தமான கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகி இருப்பதாக அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இலங்கை கடற்படை இந்தத் துரித மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
மேலதிக சிகிச்சை
இந்தநிலையில், மீட்கப்பட்ட 35 பேரும் மேலதிக சிகிச்சைக்காகக் காலி கராப்பிட்டிய போதனா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தத் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு வலுசேர்க்கும் வகையில் இலங்கை விமானப்படையின் விமானம் ஒன்றும் சம்பந்தப்பட்ட கடல் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், நாடாளுமன்றத்தில் இன்று (04.03.2026) விளக்கமளித்துள்ளார்.
கடல் எல்லை
மேலும் தெரிவித்த அவர், குறித்த கப்பல் விபத்துக்குள்ளானபோது இலங்கையின் கடல் எல்லைக்குள் இருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இருப்பினும், அக்கப்பலிலிருந்து விடுக்கப்பட்ட அவசர உதவி கோரிக்கையை ஏற்று, மனிதாபிமான அடிப்படையில் இலங்கை இந்த மீட்புப் பணியை முன்னெடுத்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விபத்துக்குள்ளான இந்தக் கப்பல் ஈரானிய கடற்படைக்குச் சொந்தமானது என்று தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |