லண்டனில் சாதித்த தமிழர்கள் - குவியும் பாராட்டு மழை
தமிழர்களின் சாதனை
லண்டனில் நடத்தப்பட்ட நீண்டதூர சைக்கிள் ஓட்டப்போட்டியில் தமிழர்கள் இருவர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ள நிலையில், அவர்களுக்கு பாராட்டி பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பிரித்தானிய தலைநகர் லண்டனில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீண்டதூர சைக்கிள் ஓட்டப் போட்டி நடைபெறுவது வழக்கம்.
அந்தப் போட்டி கடந்த மாதம் நடந்தது. போட்டியில் இந்தியா சார்பில் 160 பேர் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 1,600 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
லண்டனில் தொடங்கி ஸ்கொட்லாந்தின் தலைநகரான எடின்பராக் வரை சென்று மீண்டும் லண்டனுக்கு திரும்பும் இப்போட்டியில் 1,540 கிலோ மீட்டர் தூரத்தை 128 மணிநேரத்திற்குள் கடக்கவேண்டும் என்பது விதியாகும்.
குவியும் பாராட்டுகள்
இப்போட்டியில் தமிழகத்தின் வேலூரைச் சேர்ந்த சைக்கிள் ஓட்ட வீரர்கள் பிரமோத்குமார், ராஜ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு 125 மணிநேரத்தில் குறித்த தூரத்தை கடந்து சாதனை படைத்தனர்.
இதையடுத்து இவர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று பாராட்டு விழா நடந்தது.
மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏவுமான ஏ.பி.நந்தகுமார் பங்கேற்று இவர்களை வாழ்த்தி பேசுகையில், சாதனை படைக்க வயது ஒரு தடை இல்லை. 70 வயதுள்ள எமது முதல்வர் சைக்கிளில் மாமல்லபுரம் வரை செல்கிறார்.
சைக்கிள் போட்டியில் பங்கேற்று வேலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த 2 பேரையும் பாராட்டுகிறேன். மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற வாழ்த்துகிறேன் எனப் பேசினார்.

