வடக்கு, கிழக்கில் சட்டவிரோத நிர்மாணங்கள் - அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!
வடக்கு, கிழக்கில் உள்ள தொல்பொருள் பகுதிகளில் சட்டவிரோத நிர்மாணங்கள் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் முழுமையான அறிக்கை கிடைத்த பின்னர் நடவடிக்கை எடுக்கப்படுமென புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் பௌத்த அடையாளங்கள் நிறுவப்படுதல் தொடர்பாக செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
உரிய நடவடிக்கைகள்

அவர் மேலும் தெரிவிக்கையில்,
"வடக்கு, கிழக்கில் போர் நிலைமைகள் நீடித்தமையால் தொல்பொருள் பகுதிகள் முழுமையாக அடையாளம் காணப்படவில்லை.
தொல்பொருள் என்பது நாட்டின் மரபுரிமைகள் சார்ந்த விடயமாகும். அதற்கும் இன அடையாளங்களுக்கும் தொடர்பில்லை.
ஆகவே, அவை தொடர்பில் முழுமையான அறிக்கையொன்றை கோரியுள்ளோம்.
குருந்தூர்மலை மற்றும் வெடுக்குநாறிமலை தொடர்பில் நீதிமன்றில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.
அந்த வழக்குகளின் தீர்ப்புக்கள் வந்தபின்னரே இறுதியான தீர்மானத்தினை எடுக்க முடியும்.
அத்துடன், கிளிநொச்சி உருத்திரபுரம் கந்தசுவாமி கோவில், திருக்கோணேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் தொல்பொருளியல் அடையாளங்கள் காணப்படுவதாக தகவல் வந்துள்ளது.
அந்த விடயங்கள் சம்பந்தமாக ஆராய்ந்து உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்." எனவும் தெரிவித்துள்ளார்.