வடக்கிற்கு உரிய தீர்வை பெற்றுத்தர நடவடிக்கை - ரணில் உறுதிமொழி
அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை வடக்கிற்கு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
வடக்கின் பிரச்சினைக்குத் தீர்வு காணும்போது சிங்கள, தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க தயார் என்றும்,
75வது சுதந்திர தின விழாவின் போதாவது இந்நாட்டின் அனைத்து மக்களும் ஒரு தாயின் பிள்ளைகளாக வாழக்கூடியதாக இருக்க வேண்டுமென தான் பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அதிபர் அலுவலகத்தின் கீழ் செயற்படும், வடமாகாண அபிவிருத்தி விசேட பிரிவின் உப அலுவலகத்தை இன்று (19) வவுனியாவில் திறந்து வைத்து உரையாற்றும் போதே அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.
வடக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வு
நீண்ட காலமாக வடக்கு மற்றும் தென்னிலங்கை மக்கள் பல்வேறு காரணங்களால் சிரமப்படுவதாகவும், அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை பெற்றுக்கொடுக்க தாம் துரிதமாக செயற்பட்டு வருவதாகவும் அதிபர் குறிப்பிட்டார்.
இந்த அலுவலகத்தில் இருந்தபடி வடக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட முடியும். அதிபர் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் இது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்.
அமைச்சுக்களிலுள்ள அதிகாரிகளும் இந்த அலுவலகத்திற்கு நேரில் வந்து வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு முற்படுவார்கள் என தான் நம்புகின்றேன் என அதிபர் மேலும் தெரிவித்தார்.



