ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்ட சுற்றறிக்கை
பாடசாலை மாணவர்களிடம் நிதி பெற்று மேலதிக வகுப்புகளை நடத்துவதற்குத் தடை விதித்து மேல் மாகாண பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கு அண்மையில் வெளியிடப்பட்ட சுற்று நிருபம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க (Mahinda Jayasinghe) தெரிவித்துள்ளார்.
மேல் மாகாண பாடசாலை (Western Province) ஆசிரியர்களுக்கு பிரத்தியேக வகுப்புக்களை நடத்துவதற்குக் கட்டுப்பாடுகளை விதித்து கல்வி அமைச்சு (Ministry of Education) அண்மையில் குறித்த சுற்றுநிருபத்தை வெளியிட்டது.
இதன்படி, தமது பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்காகப் பாடசாலை இடம்பெறும் காலப்பகுதியினுள் நிதி பெற்று பிரத்தியேக வகுப்புகளை நடத்தத் தடை என அந்த சுற்று நிரூபத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலதிக வகுப்புகள்
அத்துடன் பாடசாலை காலம் நிறைவடைந்தவுடன், வார இறுதி நாட்கள் மற்றும் அரச விடுமுறை தினங்களில் பல்வேறுபட்ட இடங்களில் நிதி பெற்று தமது பாடசாலை மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகளை நடத்தவும் இந்த சுற்று நிருபத்தின் மூலம் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் வலயக் கல்வி பணிப்பாளர்க்கு தெளிவுபடுத்தப்பட்டிருந்ததுடன் இந்த ஆலோசனையை மீறும் ஆசிரியர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அந்த சுற்று நிரூபத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும், குறித்த பிரச்சினை தொடர்பில் மீளாய்வு மற்றும் கொள்கை ரீதியான தீர்மானம் எட்டப்படும் வரை அந்த சுற்று நிருபத்தைத் தற்காலிகமாகக் கைவிடுமாறு ஆளுநருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகப் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |