தெற்கிலும், வடக்கிலும் இனவாதத்தை தூண்டும் செயற்பாடுகள் : சாடும் தமிழ் எம்.பி
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன, மத, மொழி வேறுபாடின்ற செயற்படும் நிலையில் தெற்கிலும், வடக்கிலும் இனவாதத்திற்கு தூபமிடும் செயற்பாடுகள் நடப்பதாக அக்கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் (M.Jegatheeswaran) தெரிவித்துள்ளார்.
நேற்று (03) நடைபெற்ற வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “இன, மத, மொழி பேதமற்ற அரசாங்கம் என்பதை நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் நிரூபித்துள்ளோம். அரசியலுக்கு அப்பால் சென்று நாங்கள் மக்களின் மனங்களை வென்றுள்ளோம் என்பதை கடந்த தேர்தல்களின் மூலம் நிரூபித்துள்ளோம்.
வரவு செலவுத் திட்டம்
வடக்கு மாகாணத்திற்கு அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் அதிக நிதியை ஒதுக்க உள்ளோம். கடந்த அரசாங்கத்தைப் போல் இல்லாமல் நாம் செயற்படுவதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
வடக்கிலும், தெற்கிலும் இனவாதத்திற்கு தூபமிடும் அரசியல் செயற்பாடுகள செய்கின்றார்கள். நாம் அரசாங்கத்தின் ஊடாக வேலைத்திட்டங்களுக்கான நிதியை ஒதுக்குகின்றோம். அதை சரியாக வழிநடத்த வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பும் கடமையும் ஆகும்.
தொழில் நுட்ப ரீதியாக அதனை சரியாக அதிகாரிகளே வழிநடத்த வேண்டும். சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படுகின்ற போது அதனை அரசியலாக்காது சுட்டிக்காட்டி திருத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும்.
நாட்டை கட்டியெழுப்பும் பாரிய வேலைத்திட்டத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். கிட்டத்தட்ட 300 மில்லியன் ரூபாய் செலவு செய்யப்பட்ட பாரிய விஸ்தீரணமுடைய வவுனியா பொருளாதார மத்திய நிலையமானது வியாபாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நிர்மாணிக்கப்பட்டு 8 வருடங்களாக மூடப்பட்டு, அரசாங்கத்தின் பாரிய நிதி முடக்கப்பட்டு ஒரு துஸ்பிரயோகம் இடம்பெற்ற நிலையில் காணப்பட்டது.
யாழ் நூலக அபிவிருத்தி
தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது பொறுப்பு வாய்ந்த வகையில் கடந்த 10 மாதமாக செயற்பட்டு வருகின்றது. எமது அரசாங்கம் வடக்கு - கிழக்கு மக்களின் அபிமானத்தைப் பெற்ற அரசாங்கமாக உள்ளது.
எமது கட்சியின் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என வடக்கு - கிழக்குக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றார்கள்.
ஒரு வருடத்தை முன்னிட்டு செப்டெம்பர் மாதத்திற்குள் பல திட்டங்களை செய்யவுள்ளோம். அதில் வடக்கு மாகாணத்தை முதலாவதாக தெரிவு செய்துள்ளோம்.
வடக்கு - கிழக்கு மாகாண மக்கள் யுத்தத்தால் நன்கு பாதிக்கப்பட்டவர்கள் என்பதை அறிந்த வகையில் முதலாவது செயற்திட்டமாக கடந்த முதலாம் திகதி யாழ்ப்பாணத்தில் பல திட்டங்களை ஜனாதிபதி தலைமையில் ஆரம்பித்தோம்.
வரலாற்று பொக்கிசமாகிய யாழ் நூலகத்தை திட்டமிட்டு அழித்தார்கள். ஆனால் எமது அரசாங்கம் கடந்த வரவு செலவு திட்டத்தில 100 மில்லியன் ஒதுக்கி அதற்கான செயற்திட்டத்தை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்.
போரால் பாதிக்கப்படட முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். இது போல் வடக்கு மாகாணம் குறித்து எமது அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தி வருகின்றது“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
