இலங்கையில் முக்கிய விமான நிலையங்களை குறிவைக்கும் இந்திய நிறுவனம்!
இலங்கையின் மூன்று விமான நிலையங்களின் நிர்வாகத்தை கையகப்படுத்துவது தொடர்பில் இந்தியாவின் அதானி குழுமம் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பான பேச்சுக்கள் இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், இரத்மலானை விமான நிலையம் மற்றும் மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றின் வசதிகளை விரிவுபடுத்துவதற்கும் பயணிகளின் திறனை அதிகரிப்பதற்கும் ஒரு தனியார் பங்காளியின் ஆதரவு எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் ஒப்பந்தம்
இதற்கமைய, குறித்த மூன்று விமான நிலையங்களினதும் நிர்வாகத்தை கையகப்படுத்துவது தொடர்பான பேச்சுக்களை அதானி குழுமம் இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகளுடன் முன்னெடுத்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பான ஒப்பந்தம் இலங்கைக்கும் அதானி குழுமத்துக்கும் இடையில் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் இலங்கைக்கு சுமார் 1.48 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் பயணம் செய்திருந்ததாக ஹரின் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளதோடு, அவர்களுக்கான வசதிகள் விமான நிலையங்களில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
அதானி குழுமம்
இதற்கமைய, தனியார் பங்காளியாக அதானி குழுமம் குறித்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இது தொடர்பில் அதானி குழுமம் இதுவரை எந்தவொரு உத்தியோகப்பூர்வ அறிவிப்பையும் மேற்கொள்ளவில்லை.
இதேவேளை, மும்பை சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட இந்தியாவில் உள்ள 7 விமான நிலையங்களின் நிர்வாகத்தை தற்போது அதானி குழுமம் நிர்வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |