“அதானி விவகாரம் ” இந்தியாவை கோபமூட்டும் செயல் - திரைமறைவில் கோட்டாபய
அதானி விவகாரம்
அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் இலங்கை மீது இந்தியா கோபமடைந்து, வழங்கி வரும் உதவிகளை இடைநிறுத்தினால் எண்ணெய் வரிசை மேலும் அதிகமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் எஸ்.எம் மரிக்கார் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பிரச்சினையை உருவாக்க அனுமதிக்க முடியாது என கூறினார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“இந்திய பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க அரச தலைவரின் அறிவுறுத்தலின் பேரில் 500 மெகாவொட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இந்திய அதானி நிறுவனத்திற்கு வழங்கப்படும் என மின்சார சபையின் தலைவர் கோப் குழு முன்னிலையில் தெரிவித்தார். பின்னர் திரும்பப் பெற தயாராகினார்.
கோப் குழுவின் அங்கத்தவர்களாகிய நாங்கள் அவ்வாறு திரும்ப பெற முடியாது என்று கூறினோம். கோப் குழுவின் முன் சரியான தகவல்களை வழங்குவது அவரது பொறுப்பு என்பதால் அதை மாற்ற முடியாது. எந்தவொரு தனிநபரின் விருப்பத்தின் பேரிலும் அதை திரும்பப் பெற முடியாது, அதற்கு உரிமையும் இல்லை.
திரைமறைவில் கோட்டாபய
நிதியமைச்சின் செயலாளருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் அரச தலைவரின் அறிவுறுத்தலின் பேரில் என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில்,மின்சார சபையின் தலைவர் பதவி விலகியுள்ளார். அவ்வாறு பதவி விலகுவதால் மாத்திரம் இந்த குழப்பத்தில் இருந்து தப்ப முடியாது.
எனவே, இது குறித்து முறையான முழு விசாரணை நடத்த வேண்டும். இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவி விலகியுள்ளதாக அரச தலைவர் தாம் டுவிட்டர் செய்தியொன்றை அனுப்பியதால் இந்தப் பிரச்சினையை கைவிட முடியாது. ஏனெனில் இதன் மூலம் பெரும் சர்வதேச பிரச்சினைகள் எழுப்பப்பட்டுள்ளன.
கடந்த சில மாதங்களாக நமது நாட்டு மக்களுக்கு எண்ணெய், மருந்து மற்றும் அத்தியாவசிய உணவுகளை வழங்குவதில் இந்தியா பெரும் உதவியாக இருந்ததை நாம் அறிவோம்.
ஆனால் இன்று அதானி எங்கள் மீது கோபப்பட்டு அதுபற்றி அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்தியாவும் கோபமடைந்து நம்மை விட்டு வெளியேறினால், இந்த எண்ணெய் வரிசை மேலும் அதிகரித்து எண்ணெய் பற்றாக்குறையாக மாறும்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பிரச்சினையை உருவாக்க அனுமதிக்கும் வண்ணம் அறிக்கை வெளியிட்ட தலைவர் நாட்டை குழப்பிவிட்டு பதவி விலக அனுமதிக்க முடியாது.
விசாரணை மூலம் உண்மையா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள மக்களுக்கு உரிமை உண்டு. எமக்கு உதவி செய்யும் இந்தியா போன்ற ஒரு நாட்டை கைவிட முடியாது.
எனவே, இந்த அனைத்து விவகாரங்கள் குறித்தும் உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமாகும்” என்றார்.

