பாக்குநீரிணையினை நீந்திக்கடந்து சாதனை படைத்த ஈழத்தமிழன்!
இன்றைய தினம் பாக்குநீரிணையினை நீந்தி கடந்து மட்டக்களப்பு மண்ணிற்கு மட்டுமல்ல ஈழத்தமிழருக்கும் பெருமைசேர்த்தார் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லுரியின் பழைய மாணவரான மதுஷிகன்.
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லுரியின் பழைய மாணவரான மதுஷிகன் இச் சாதனையினை புனித மிக்கேல் கல்லூரியின் 150 ஆவது ஆண்டு நிறைவில் நிகழ்த்தியிருப்பது சிறப்பம்சமாகும்.
20 வயதுடைய, அதிபர் சாரணர் விருது பெற்ற மதுஷிகன் இந்தியாவின் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் வரையான 30 கிலோ மீற்றர் தூரத்தை இன்று அதிகாலை நீந்தத் தொடங்கி இன்று பிற்பகல் 2 மணியளவில் நாட்டின் தலைமன்னாரை வந்தடைந்தார்.
மிகப் பெரிய சவால்
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாக்கு நீரிணையை நீந்திக் கடக்க வேண்டும் என்பது நீச்சல் வீரர்கள் பலரினதும் அபிலாஷையாக இருந்து வருகின்றது.
ஆனால் இதை நீந்திக் கடக்கின்றமை என்பது மிகப் பெரிய சவால் ஆகும். ஏனெனில் இந்நீரிணை பூராவும் கடல் பாம்புகள், ஆபத்தான கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன.
இதையும் தாண்டி மட்டக்களப்பை சேர்ந்த இந்த மாணவன் சாதித்திருப்பது பெரிய விடயமே காரணம் இத் தூரத்தை நீந்திக்கடக்க முயன்ற பலர் தோல்வியை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.