புரியாத புதிராக மாறிய தலிபான்களின் தாக்குதல்கள்! ஆப்கான் மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ள தகவல்
ஆப்கானிஸ்தான் இராணுவ வீரர்கள் ஏன் தலிபான்களிடம் இவ்வளவு எளிதாக விட்டுக்கொடுத்தனர் என்பது இப்போதும் புதிராகவே இருக்கிறது என்று ஆப்கானிஸ்தானின் மத்திய வங்கி ஆளுநர் அஜ்மல் அஹமதி தெரிவித்துள்ளார்.
ஆப்கான் மத்திய வங்கியின் ஆளுநர் அஜ்மல் அஹமதி நாட்டைவிட்டு வெளியேறிய நிலையில் அந்நாட்டின் பண மதிப்பு பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இந்நிலையில், அஹமதி தான் நாட்டைவிட்டு வெளியேறிய சூழல் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,
"கடந்த ஞாயிறு காலை நான் வழக்கம்போல் பணியில் இருந்தேன். அன்று காலையில் இருந்தே தலிபான்கள் முன்னேற்றம் தொடர்பான செய்திகள் கவலை அளிப்பதாக இருந்தன. நான் வங்கியிலிருந்து வெளியேறினேன். அந்தத் தருணத்தில் எனது ஊழியர்களை மட்டும் அங்கேவிட்டுவிட்டு வெளியேறியவது கவலையை ஏற்படுத்தியது" என்று பதிவிட்டுள்ளார்.
ஆப்கான் இராணுவ விமானம் மூலம் அஹமதி சிங்கப்பூரில் தஞ்சமடைந்துள்ளார். அஹமதி உலக வங்கி, அமெரிக்கக் கருவூலம் போன்ற இடங்களில் பணிபுரிந்த அனுபவசாலி. ஆப்கானிஸ்தான் இராணுவ வீரர்கள் ஏன் தலிபான்களிடம் இவ்வளவு எளிதாக விட்டுக்கொடுத்தனர் என்பது இப்போதும் புதிராகவே இருக்கிறது.
தலிபான்கள் முன்னேற முன்னேற ஆப்கானிஸ்தானின் சந்தை அச்சுறுத்தலுக்கு உள்ளானது. இதனால் ஆப்கனின் பணமான ஆஃப்கானியின் மதிப்பு சரிந்தது.
முன்னதாக டொலருக்கு நிகரான ஆஃப்கானியின் மதிப்பு 86 ஆக இருந்த நிலையில், தலிபான்கள் ஆக்கிரமிப்பு தொடங்கிய பின் 100 ஆக சரிந்தது.
இதேவேளை, அதிபர் கனியின் திட்டமிடுதல் இன்மையும், அவரது ஆலோசகர்கள் அவரை சரியான பாதையில் வழிநடத்தாதும் அரசின் வீழ்ச்சிக்கு ஒரு காரணம். ஆட்சி மாற்ற திட்டம் எதையும் ஏற்படுத்தாமல் நாட்டைவிட்டு வெளியேறிய அதிபர் கனி மன்னிக்க முடியாதவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.