மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ள ரிஷாத்தின் மனைவி உள்ளிட்ட நால்வர்
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் இல்லத்தில் பணிபுரிந்த நிலையில் தீக்காயங்களுக்குள்ளாகி உயிரிழந்துள்ள சிறுமியின் மரணம் தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் ரிஷாத் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட அனைவரையும் இன்றையதினம் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அதேவேளை மேற்படி மரணம் தொடர்பில் இதுவரை 30க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் உள்ளவர்கள் மற்றும் வீட்டுக்கு வந்து செல்பவர்களும் அதில் உள்ளடங்குவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
விசாரணை நடத்தி வரும் பொலிஸ் குழு இன்றைய தினம் மீண்டும் டயகமவிலுள்ள ஹிஷாலினியின் வீட்டுக்குச் சென்று விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.
நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க ரிசாத் பதியுதீனின் மனைவி கிருலப்பனை பொலிஸ் நிலையத்திலும் ஏனையோர் பொரளை பொலிஸ் நிலையத்திலும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு தரப்பினரிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதன்மூலம் வெளிவரும் தகவல்களுக்கிணங்க விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சிறுமி ஹிசாலினி உட்பட பல பெண்களை பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் வீட்டில் வேலைக்கு அமர்த்தியுள்ள தரகரான சங்கர் என்பவரது வங்கிக் கணக்குகள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வரும் நால்வரும் கொழும்பு நீதிமன்ற மருத்துவர் முன்னிலையில் முன்னிலை செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை ரிஷாட் பதியுதீனின் வீடு நேற்று முன்தினம் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அங்கிருந்த மண்ணெண்ணெய் போத்தல் மற்றும் லைட்டர் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தற்போது ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களிடம் விசாரணைகள் மேற்கொண்டு வரும் பொலீஸ் குழு மீண்டும் இன்றைய தினம் டயகம பகுதியிலுள்ள ஹிசாலினியின் வீட்டுக்கு சென்று விசாரணைகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை நேற்றைய தினமும் ஹிசாலினியின் மரணம் தொடர்பில் நீதி கோரி மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது