அமெரிக்காவைத் தாக்கும் கடும் பனிப்புயல்: ஏர் இந்தியா விமான சேவைகள் ரத்து
அமெரிக்காவில் கடும் பனிப்புயலுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், நியூயார்க் மற்றும் நெவார்க் நகரங்களுக்கான விமான சேவைகளை ஏர் இந்தியா ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
நியூயார்க், நியூ ஜெர்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள நகரங்களில் இன்று கடுமையான பனிப்பொழிவு நிலவும் என்றும், பனிப்புயல் வீசுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
குறித்த எச்சரிக்கையை அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது.
பலத்த காற்று
இந்தநிலையில், நேற்று (22-02-2026) இரவு முதல் மணிக்கு 40 முதல் 56 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் கடும் பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்று காரணமாகக் கடலோரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
எனவே, இன்றும் தொடர்ச்சியான காலநிலையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நியூயார்க் மற்றும் நெவார்க் நகரங்களுக்கான விமான சேவைகளை ரத்து செய்வதாக ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.

பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்குப் பயண உதவிகளை வழங்கத் தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
இதேபோல, அமெரிக்காவின் டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனமும் பனிப்புயல் காரணமாகத் தனது விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
பயணிகள் கூடுதல் கட்டணமின்றித் தங்களது பயணத் திட்டங்களை மாற்றிக்கொள்ள அந்நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |