அமெரிக்கத் தளங்களை இலக்கு வைத்து ஈரான் தொடர் தாக்குதல் : கத்தார் விடுத்துள்ள அறிவிப்பு
புதிய இணைப்பு
கட்டாரில் உள்ள அல்-உடைட் (Al Udeid) விமானப் படைத் தளம் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தாக்குதலில் தமது போர் விமானங்கள் மூலம் பராமரிப்பு நிலையம் மற்றும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் ஆகியவை அழிக்கப்பட்டதாக ஈரான் மேலும் குறிப்பிட்டுள்ளது.
அதேபோல், ஓமானிலுள்ள அமெரிக்க கடற்படை வழங்கல் மற்றும் எரிபொருள் நிரப்பும் நிலையத்தை இலக்கு வைத்தும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இடைமறிப்பு நடவடிக்கைகளின் போது சிதறிய பாகங்களால் ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளதாக கத்தாரின் உள்துறை அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
காயமடைந்தவர்களுக்குத் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன் பாதுகாப்பு அதிகாரிகளும் குடிசார் பாதுகாப்புக் குழுக்களும் அங்கீகரிக்கப்பட்ட அவசரகாலத் திட்டங்களின்படி பதில் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
Statement from the Ministry of Interior regarding operational developments following the Iranian attacks. #MOIQatar pic.twitter.com/9CZoipLNtc
— Ministry of Interior - Qatar (@MOI_QatarEn) July 12, 2026
முதலாம் இணைப்பு
ஐக்கிய அரபு இராச்சியம் மீது ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும் ஈரானிலிருந்து வரும் ஏவுகணைகளையும் ஆளில்லா விமானங்களையும் தனது வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து வருவதாக ஐக்கிய அரபு அமீரகம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தெரிவித்தது.
கத்தாரின் உள்துறை அமைச்சகம் இன்று காலை இரண்டாவது முறையாக நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல் அளவை உயர் நிலைக்கு உயர்த்தியுள்ளதுடன், குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளுக்குள் அல்லது பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு வலியுறுத்தியுள்ளது.
பாதுகாப்பு எச்சரிக்கை
அதே நேரத்தில், கத்தார் மற்றும் பஹ்ரைன் தங்கள் பாதுகாப்பு எச்சரிக்கை நிலைகளை உயர்த்தி, குடியிருப்பாளர்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு வலியுறுத்தின.

அண்டை நாடான கத்தாரில், பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலை அதிகமாக இருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்ததுடன், மக்கள் தங்கள் வீடுகளுக்குள் அல்லது பிற பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு வலியுறுத்தியது.
மேலும், குடியிருப்பாளர்கள் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும், தேவையற்ற நடமாட்டத்தைத் தவிர்க்குமாறும் அது கேட்டுக்கொண்டது.
வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒலிப்பான்கள் இயக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் அமைதியாக இருக்குமாறு பஹ்ரைனின் உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |