வெளிநாட்டில் இருந்து கொண்டு இலங்கையில் தீவிரவாத பிரச்சாரம்! சஹ்ரானின் நண்பன் உட்பட இருவர் சிக்கினர்
இலங்கையில் தீவிரவாத சித்தாந்தங்களை பரப்புதல் மற்றும் தீவிர பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான நிதி சேகரிப்பு தொடர்பான சந்தேகத்தின் அடிப்படையில் இருவரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் நேற்று (25) கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மாத்தளை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
மேலும் இவர் கடந்த டிசம்பர் 5 ம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
அவர் வெளிநாட்டில் இருந்தபோது, இலங்கையில் தீவிரவாத மற்றும் பல்வேறு இனவாத கருத்துக்களை பரப்புவதற்காக இணையத்தில் பல்வேறு சொற்பொழிவுகளை வழங்கினார் என்று அஜித் ரோஹண குறிப்பிட்டார். மேலும் இலங்கையில் தீவிரவாத பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்தில் நிதி திரட்டுவதிலும் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
இதேவேளை, சமூக ஊடகங்களில் ஈஸ்டர் தாக்குதலை நியாயப்படுத்தியதற்காக 49 வயதான ஒருவர் மட்டக்களப்பு - காத்தான்குடியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டார். ஈஸ்டர் தாக்குதலின் முக்கிய குற்றவாளியான சஹ்ரானின் நெருங்கிய நண்பராகவும் அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை மட்டக்களப்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவு கைது செய்துள்ளது.
மேலதிக விசாரணைக்காக அவரை கொழும்புக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.