அலி ரோஷனுக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் உத்தரவு
உரிமம் இன்றி யானை ஒன்றை வைத்திருந்ததாக இரண்டு குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சமரப்புலிகே நிராஜ் ரோஷன் எனப்படும் அலி ரோஷனுக்கு (Ali Roshan) 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக, பிரதிவாதிக்கு நீதிமன்றம் 20.6 மில்லியன் ரூபா அபராதம் விதித்ததுடன் குறித்த யானையை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு
தண்டனைச் சட்டம் மற்றும் பொது சொத்துச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், ரோஷன் மற்றும் மூன்று பேர் வனவிலங்குத் துறையின் யானைப் பதிவேட்டில் உள்ள பதிவுகளை பொய்யாகப் பயன்படுத்தி ஐந்து யானைகளை சட்டவிரோதமாக வைத்திருந்து கடத்த சதி செய்ததாகக் குற்றச்சாட்டுகள் இருந்தன.
இந்தக் குற்றங்கள் 2009 மற்றும் 2015 க்கு இடையில் மஹரகம, அரவ்வல, நாவல, பட்டாரமுல்ல மற்றும் ஒருவல உள்ளிட்ட பகுதிகளில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இரண்டு குற்றச்சாட்டுகளில் ரோஷன் குற்றவாளி என்று நீதிமன்றம் கண்டறிந்ததுடன் மற்றைய மூன்று பேரும் நியாயமான ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
