ரணிலின் சர்வகட்சி அரசாங்கத்தில் அமைச்சு பதவியை ஏற்றுக்கொள்வது தொடர்பில் சி.வி வெளியிட்ட தகவல்..!
தமிழ் மக்கள் சார்பில் தாம் முன்வைத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதன் பின்னரே சர்வகட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியினை ஏற்பது குறித்து ஆராயவுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி அரசாங்கத்தில் சி.வி.விக்னேஸ்வரன் அமைச்சு பதவியை ஏற்றுக்கொள்வாரா என ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
ரணில் விடுத்த அழைப்பு
சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்காக ஆதரவு வழங்குமாறு சகல கட்சிகளுக்கும் அதிபர் ரணில் விக்ரமசிங்க எழுத்து மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில், சர்வகட்சி அரசாங்கத்திற்கு தமது ஆதரவை வழங்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், சர்வகட்சி அரசாங்கத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எக்காரணத்தை கொண்டும் அமைச்சு பதவிகளை ஏற்காது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அதிபர் தெரிவின் போது, ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கிய விக்னேஸ்வரன் சர்வகட்சி அரசாங்கத்தில் அமைச்சு பதவியை ஏற்றுக்கொள்வாரா இல்லையா என்ற கேள்வி அரசியல் அவதானிகள் பலரால் விவாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
