கடவுச்சீட்டு வழங்கும் ஒப்பந்தத்தை பெற்ற நிறுவனங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு
கடவுச்சீட்டு வழங்கும் ஒப்பந்தத்தை பெற்ற நிறுவனங்கள் ஒக்டோபர் இரண்டாம் வாரத்தில் 750,000 வெற்று கடவுச்சீட்டுகளை வழங்குவதாக உறுதியளித்த போதிலும் இதுவரை 52,000 கடவுச்சீட்டுகளே வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த குற்றச்சாட்டை இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சங்கம் முன்வைத்துள்ளது.
இந்தநிலையில், மீண்டும் எத்தனை கடவுச்சீட்டுகள் வழங்கப்படும் என்பது குறித்த தகவல்களை மேற்படி நிறுவனம் குடிவரவு திணைக்களத்திற்கு வழங்கவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வெளிநாட்டு கடவுச்சீட்டு
குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், டெண்டர் வழங்கிய நிறுவனத்தின் நம்பகத்தன்மை குறித்து கவனம் செலுத்தாத காரணத்தினால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கல் தொடர்பான உண்மை நிலவரத்தை சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு திணைக்கள அதிகாரிகள் வெளிப்படுத்தாமை வருத்தமளிப்பதாகவும் குடிவரவு அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், தற்போதைய கடவுச்சீட்டு வழங்கலுக்கு குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் உயர் அதிகாரிகளே பொறுப்பு என்றும் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |