சரத்வீரசேகரவுக்கு கதவடைத்தது அமெரிக்கா
அடுத்த மாத இறுதியில் நடைபெறவுள்ள அமெரிக்க ஆய்வுப் பயணத்தில் பங்கேற்க விசா வழங்குவதற்குத் தேவையான பாதுகாப்பு அனுமதி அறிக்கைகளைப் பெறுவதற்கு நீண்ட காலம் எடுக்கும்.
எனவே அவரது பெயரை வேறு பெயருக்கு மாற்றுமாறு அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் வீரசேகர தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கான பயணத்தில்
தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் என்ற வகையில், ஏனைய துறைசார் மேற்பார்வைக் குழுத் தலைவர்களுடன் இணைந்து அமெரிக்காவுக்கான பயணத்தில் பங்கேற்கவுள்ளதாக கலாநிதி வீரசேகர சுட்டிக்காட்டினார்.
இந்த ஆய்வுப் பயணத்திற்கு வேறு பெயரைப் பரிந்துரைக்குமாறு அமெரிக்கத் தூதரகம் நாடாளுமன்ற செயலகத்திற்கு அறிவித்துள்ளமை உத்தியோகபூர்வமாக தெரியுமா என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு நேற்று (25) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக கலாநிதி வீரசேகர தெரிவித்தார்.
அனுசரணையாளருக்கு உரிமை இல்லை
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஒருவரைத் தவிர, பிற பரிந்துரைக்கப்பட்டவர்களை வித்தியாசமாக நடத்துவதற்கு அனுசரணையாளருக்கு உரிமை இல்லை என்றும், கடற்படையில் இருந்தபோது, பல்வேறு கற்கை நெறிக்காக அமெரிக்கா சென்றுள்ளார் என்றும் வீரசேகர கூறினார்.
ஆய்வுப் பயணத்தில் இணைவதற்கு தமக்கு விசேட ஆர்வமோ காரணமோ இல்லை எனவும், வீசா வழங்குவதில் அமெரிக்கத் தூதரகத்திற்கு முழு உரிமை இருந்தாலும், தான் பாரபட்சமாக நடத்தப்படுவது தொடர்பில் சபாநாயகர் அமெரிக்க தூதரகத்திடம் உத்தியோகபூர்வமாக விசாரிக்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் சபாநாயகருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கலாநிதி வீரசேகர குறிப்பிட்டுள்ளார்