அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் நடந்த மிக மோசமான மனிதக் கடத்தல் - காவல்துறையினருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் கொள்கலன் வண்டி ஒன்றுக்குள் இருந்து 46 குடியேற்றவாசிகளின் சடலங்களை அந்நாட்டு காவல்துறையினர் மீட்டுள்ளனர் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேவேளை நான்கு சிறுவர்கள் உட்பட16 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் வெப்ப பக்கவாதம் மற்றும் சோர்வு காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இறந்துகிடந்த குடியேற்றவாசிகள்
டெக்சாஸின் சென் அன்டோனியோலில் நேற்று கொள்கலன் வண்டி ஒன்றை காவல்துறையினர் சோதனை செய்த போது இறந்து கிடந்த 46 குடியேற்றவாசிகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அதில் வயது வந்த நபர்களே இறந்துள்ளதாகவும் குழந்தைகள் எவரும் இறந்தவர்களில் காணப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
மூச்சுத் திணறலால் உயிரிழப்பு
இவர்கள் மெக்சிகோ அல்லது வேறு ஒரு நாட்டில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு வந்தவர்கள் என நம்பப்படுகிறது.
அந்நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலையில், கொள்கலன் வண்டிக்குள் சுவாசிக்க முடியாது, இவர்கள் உயிரிழந்து இருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத ஆட்கடத்தல்
அத்துடன் இது அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் நடக்கும் மனித கடத்தலில் மிக மோசமான அண்மைய சம்பவம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மனித கடத்தல் சம்பவம் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் விசாரணைகளை நடத்தி வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.