நான் மகிந்தவாதியா! சீறும் அம்பிட்டிய சுமனரத்ன தேரர்
தம்மை மகிந்த வாதியாக சித்தரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், தாம் எந்தவொரு அரசியல்வாதிக்கும் சார்பாக கருத்து தெரிவிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது உத்தியோகப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியிலேயே, அம்பிட்டிய சுமனரத்ன தேரர் இதனை தெரிவித்துள்ளார்.
சிங்களவர்களின் பிரச்சனைகள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்களவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் தாம் அண்மையில் சில கருத்துக்களை வெளியிட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, தமது நடத்தைகள் தொடர்பில் மற்றுமொரு தேரர் கருத்து வெளியிட்டிருந்ததாகவும் இனவாதத்தை தூண்டும் நபராக தாம் குறித்த தேரரால் சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவமதிக்கப்படும் தேரர்
தாம் பிறந்த நாட்டில் இடம்பெறும் அநீதிகளுக்காக குரல் கொடுக்கும் தம் மீது தேவையற்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதாகவும் ஒரு தேரராக இதை தாம் பாரிய அவமரியாதையாக கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் கடந்த காலங்களில் பல பிரச்சனைகள் இடம்பெற்றிருந்தாலும், அவை எவற்றிலும் தாம் பங்கு கொள்ளவில்லை எனவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிங்களவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்காக மாத்திரம் தாம் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருவதாகவும் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கையில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்க முன்வராத தரப்பினர் தற்போது மட்டக்களப்பில் உள்ள பிரச்சனைக்கு தீர்வு வழங்க முன்வருவதாகவும் தம்மை இனவாதியாகவும் பெயரிட முயற்சிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் சந்திப்புக்கள்
ஒரு தேரரை நாட்டின் அரசியல் தரப்பினர் சந்திப்பது ஒரு சாதரணமான விடயம் எனவும் இதை புரிந்து கொள்ள முடியாத தரப்பினர் தம்மை அரசியலில் இணைத்து கருத்து வெளியிடுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் அதிபரான மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்குள் அழைத்து வரும் பணிகளில் தாம் ஈடுபடுவதாக முன்வைக்கப்படும் கருத்துக்கள் மூடத்தனமானவை என அவர் கூறியுள்ளார்.
தாம் இதுவரை எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அடிபணிந்தது இல்லை எனவும் எதிர்காலத்தில் அவ்வாறு செய்ய போவதில்லை எனவும் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தமது நடவடிக்கைகள் குறித்து மகாநாயக்க தேரர்கள் அதிருப்தியடைந்திருந்தால், அது தொடர்பில் வருத்தமடைவதாவும் அவர் மேலும் கூறியுள்ளார்.