மயிலத்தமடு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்
மயிலத்தமடு-மாதவனை பகுதியில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய காணி அபகரிப்பினை நிறுத்தாவிட்டால், வடகிழக்கில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களை ஒன்று திரட்டி பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதாக கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த பகுதியில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய காணி அபகரிப்பினை கண்டித்தும் கால்நடை பண்ணையாளர்களுக்கு நீதி கோரியும் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று மாணவர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
மயிலத்தமடு மாதவனைப் பகுதிகளில் காணப்படும் மட்டக்களப்பு கால்நடை வளர்ப்பாளர்களுக்கான கால்நடை மேச்சல் தரைக் காணிகள் அம்பாறை மற்றும் பொலநறுவை பகுதிகளிலிருந்து வருகை தந்துள்ள சிங்கள விவசாயிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
வாழ்வாதாரம் பாதிப்பு
இதன் காரணமாக மட்டக்களப்பை சேர்ந்த கால்நடை வளர்ப்பாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக அரசில் அங்கம் வகிக்கின்ற மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் மௌனமாக இருப்பதாகவும், மாவட்ட அபிவிருத்தி கூட்டங்களிலும் இது தொடர்பான முடிவு எட்டப்படவில்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தொடர் போராட்டம்
இந்த நிலையில், தமக்கான நீதி வழங்கக் கோரி கடந்த 49 நாட்களாக மட்டக்களப்பு கால்நடைப் பண்ணையாளர்களால் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன், அவர்கள் ஊர்வலமாக சென்று சித்தாண்டியில் கவனயீர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் மட்டக்களப்பு கால்நடைப்பண்ணையாளர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
நீதிமன்றம் மூலம் நிலத்தை கையகப்படுத்தாதே!
— Worldwide Tamils (@senior_tamilan) November 2, 2023
"வாழ விடு வாழ விடு எங்கள் நிலத்தில் வாழ விடு"
"வெளியேறு வெளியேறு எங்கள் நிலத்தை விட்டு வெளியேறு"
மயிலத்தமடு, மாதவனை நில அபகரிப்புக்கு எதிராக மட்டக்களப்பு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம். #Batticaloa #WWTnews #WorldwideTamils pic.twitter.com/37zUcaHBwP