இலங்கையை இறுகப்பற்ற பிக்குகளுக்கு சாமரம் வீசும் இந்தியா!
இலங்கையில் நிலவிவரும் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் மூன்று நாட்களுக்கான பயணத்திட்டத்துடன் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கையில் தவறவிட்ட இலங்கை நிகழ்ச்சி நிரல்களையும் உள்ளடக்கி நகர்வதை அவதானிக்க முடிகிறது.
நேற்றைய தினம் (01) கொழும்பை வந்தடைந்த நிர்மலா சீதாராமன் கண்டி திருகோணமலை என தனது விஜயங்களை மேற்கொண்டிருந்தார்.
அவரது பயணத்தின் ஆரம்பத்தில் அவர் சிறிலங்காவின் பௌத்த பீடங்களை மையப்படுத்தியே இந்திய அமைச்சரவையின் தமிழச்சியின் சந்திப்புக்களும், பேச்சுக்களும் இடம்பெறுகின்றது.
முதலில் கண்டி மகாநாயக்க தேரர்களை சந்தித்து பேசியிருந்தார்.
அண்மைய நாட்களில் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் போன்ற கடும்போக்கு பிக்குகள் தமிழ் மக்களுக்கு எதிரான இனத்துவேச கருத்துக்களை தெரிவித்து வருகிற நிலையில் தமிழச்சியான நிர்மலா சீதாராமன் பௌத்த மகாநாயனாக்க தேரர்களை சந்தித்து பேசியுள்ளார்.
இதற்கிடையே தமிழர்களை துண்டுதுண்டாக வெட்டப்போவதாக பொதுவெளியில் எச்சரிக்கை விடுத்த அம்பிட்டிய சுமணரத்ன தேரர் அதிசயமாக தனது கருத்துக்கு பகிரங்கமாக மன்னிப்பு கோருகிற காணொளியொன்றினை வெளியிட்டிருக்கிறார்.
தனது தாயின் கல்லறை உடைக்கப்பட்டதால் மிகுந்த மனவேதனையில் தான் பேசிவிட்டதாக கூறி தனது மன்னிப்பை கோரியுள்ளார்.
தெருச்சண்டியனாக மாறி தமிழர்களை துண்டு துண்டுகளாக வெட்டுவேன் என மனநோயாளி போல நடுத்தெருவில் வந்து கோமாளிக்கூத்தாடும் இவரைப்போன்றவர்களை சிறிலங்காவின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்ற குரல்கள் தமிழர் தரப்பில் இருந்து எழுந்த நிலையில் உள்ளது.
அம்பிட்டிய சுமணரத்ன தேரர் போன்று கடும்போக்கான கருத்துக்களை தெரிவிக்காவிட்டாலும், இதே சட்டத்தின் கீழ் கிறிஸ்தவ போதகர் ஜெரோன் பெர்னாண்டோ மற்றும் நகைச்சுவைப் பேச்சாளர் நடாஷா எதிரிசூரிய ஆகியோரை வளையம் கட்டி கைதுசெய்த நிலையில், வீதியில் நின்று தமிழ் மக்களை வெட்டுவேன் என பகிரங்கமாக கொலை வெறிக்கூச்சல் எழுப்பிய சுமணரத்ன தேரரை மட்டும் இந்த சட்டத்தின் கீழ் இதுவரை கைது செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் துணியவில்லை.
இவ்வாறான ஒரு பின்னணியில் தான் இலங்கை மக்களுக்காக இந்தியப் பிரதமரால் வலுவான தொடர்புகள் உருவாக்கப்பட்டு வருவதான செய்தியுடன் முதலில் மல்வத்துபீட மகாநாயக்க தேரர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன் அதன் பின்னர் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்புக்கள் பின்னணியில் இலங்கையிலுள்ள மதத்தலங்களுக்கு இந்தியாவின் நிதியுதவியில் சூரிய மின்சாரத்தை வழங்கும் வகையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைவசமுள்ளதான செய்தியும் டில்லியால் கூறப்பட்டது.
இந்திய நிதியுதவியில் சூரிய மின்சாரம் வழங்கப்படும் என கூறப்பட்டாலும் இந்த திட்டத்தின் பெரும் பகுதியை பௌத்த விகாரைகளே எடுக்கவுள்ளமை தெரிகின்றது.
ஏனென்றால், விகாரைகளே அண்மையில் மின்சார கட்டணங்களை செலுத்த முடியாமல் அல்லாடிக்கொண்டிருக்கின்றன.
மேலும் இதுபோன்ற இலங்கை மற்றும் உலக நிலவரங்களை தெரிந்து கொள்ள இன்றைய செய்தி வீச்சு நிகழ்ச்சியை காண்க.