கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
கல்வி அமைச்சின் வளாகத்தில் இன்று (23) இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் அதனை கட்டுப்படுத்த காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழக பிக்குகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் அமைப்பின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் பலர் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கல்வி அமைச்சின் வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்ததை இது காட்டுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை 27ஆம் திகதி முதல் பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தை கட்டம் கட்டமாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக பல்கலைக்கழகத்தின் ஆளும் குழு முன்னர் தெரிவித்திருந்ததாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன உளைச்சலை ஏற்படுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள்
இலங்கையில் 42 இலட்சம் சிறுவர்களின் பொதுக் கல்வியை கையாளும் கல்வி அமைச்சின் வளாகத்தினுள் பலவந்தமாக நுழைந்து மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நடந்து கொண்டதை அடுத்து அவர்களை அங்கிருந்து அகற்ற காவல்துறையினர் சட்டரீதியாக செயற்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.