எரிபொருள் பெற நின்றவர் மீது காலால் உதைத்த இராணுவ அதிகாரிக்கு ஏற்பட்ட சிக்கல்
காலால் உதைத்த இராணுவ அதிகாரி
குருநாகல் யக்கஹாபிட்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெறுவதற்காக நின்ற நபரை காலால் உதைத்த இராணுவ லெப்டினன்ட் கேணல் மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இராணுவத் தளபதிக்கு பரிந்துரை செய்துள்ளது.
இச்சம்பவத்தில் மற்றுமொரு இராணுவத்தினரும் குறித்த நபரைத் தாக்குவதை அவதானித்து அவரை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்குமாறு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
தேசிய பாதுகாப்பு அணிவகுப்பின் வாரியபொல முகாமின் கட்டளை அதிகாரியாக இருந்த லெப்டினன் கேணல் பிரதி விராஜ் குமாரசிங்கவுக்கு எதிராகவே இந்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் பிரதீப் அத்தநாயக்க என்ற நபரே தாக்கப்பட்டுள்ளார்.
தம்புள்ளை யக்கபிஹிட்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவ அதிகாரி, ஒருவரை எட்டி உதைத்ததாக இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக பரவிய செய்தி தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் கிடைத்தவுடன் எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும், கூட்டத்தை கட்டுப்படுத்த இராணுவம் மற்றும் காவல்துறை உத்தியோகத்தர்களை வரவழைத்து எரிபொருள் முறையாக விநியோகிக்கப்பட்டதா என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆராய்ந்துள்ளது.
இரண்டு பேர் குறித்த நபரை பிடித்து இராணுவ லெப்டினன்ட் கேணலிடம் ஒப்படைத்த போது இந்தச் சம்பவம் நடந்தேறியமை குறிப்பிடத்தக்கது.