செம்மணி அகழ்வுப்பணி! HRCSL கூற்றுக்கு பொதுப் பாதுகாப்பு அமைச்சம் விளக்கம்
செம்மணி மனித புதைகுழி தளத்தில் வழக்கமான அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபடுவது, விசாரணைகளின் முடிவைப் பாதிக்கக்கூடும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணையம் (HRCSL) அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தது.
இந்நிலையில் அகழ்வாராய்ச்சிக்கு அடிக்கடி சுழற்சி முறையில் அல்லது வெவ்வேறு பாதுகாப்பு அதிகாரிகளை நியமிப்பது நடைமுறைக்கு ஏற்றதல்ல என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால,
சுழற்சி நேர அடிப்படை
“அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் இருந்து பொலிஸ் அதிகாரிகள் சுழற்சி நேர அடிப்படையில் பணியமர்த்தப்படுகின்றனர்.
அவர்கள் சம்பவ இடத்திற்கு பாதுகாப்பை வழங்க மட்டுமே அங்கு இருக்கிறார்கள். அப்படித்தான் பாதுகாப்பு பணி செய்யப்படுகிறது.
அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் இருந்து ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அதிகாரிகள் பணியமர்த்தப்பட வேண்டும். வேறு வழியில்லை.
கொழும்பிலிருந்து செம்மணிக்கு பொலிஸ் அதிகாரிகளை அனுப்ப முடியாது.
சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் அகழ்வாராய்ச்சி பணிகள் நடத்தப்படுகிறது. இந்த விசாரணை செயல்பாட்டில் செல்வாக்கு செலுத்தவோ அல்லது தலையிடவோ பொலிஸிற்கு எந்த அதிகாரமும் இல்லை.
பொலிஸ் அதிகாரிகள்
பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பை வழங்க மட்டுமே உள்ளனர். அவர்களின் இருப்பு விசாரணைகளின் முடிவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது” என கூறியுள்ளார்.
செம்மணி பகுதியில் 200க்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் ஏற்கனவே தோண்டி எடுக்கப்பட்ட இடத்தில் மனித உரிமைகள் ஆணையம் சமீபத்தில் ஒரு உண்மை கண்டறியும் பணியை மேற்கொண்டது.
இந்த விஜயத்தின் போது, காணாமல் போனோர் அலுவலக ஊழியர்கள், சட்டத்தரணிகள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்களின் சிவில் சமூக பிரதிநிதிகள், யாழ்ப்பாண நீதிபதி (அப்போது) அமலவாலன் ஆனந்தராஜா, மற்றும் பல தரப்பினருடன் மனித உரிமைகள் ஆணையம் கலந்துரையாடியது.
இதன்படி விசாரணையை திறம்பட முடிக்க வெளிநாட்டு நிபுணத்துவமும் மேம்பட்ட தொழில்நுட்பமும் தேவைப்படும் என்று HRCSL தனது கண்டுபிடிப்புகளில் குறிப்பிட்டுள்ளது.
வழக்கமான பொலிஸ் அதிகாரிகளின் தொடர்ச்சியான ஈடுபாடு விசாரணைகளின் முடிவைப் பாதிக்கக்கூடும் என்றும் அது எச்சரித்துள்ளது.
இதன்படி கடந்த ஆண்டு (2024) ஜூலை மாதம் நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் செம்மணியில் அகழ்வாராய்ச்சிகள் மீண்டும் தொடங்கின. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், தடயவியல் நிபுணர்கள் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை இந்த செயல்முறையை மேற்பார்வையிட்டனர்.
இதுவரை, 200க்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. இது உள்நாட்டு மோதல் முடிவடைந்ததிலிருந்து வடக்கு மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனித புதைகுழிகளில் ஒன்றாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
