ஆந்திராவில் பாரிய தொடருந்து விபத்து: முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி முக்கிய உத்தரவு!
ஆந்திர மாநிலத்தில் இரண்டு தொடருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டுள்ள விபத்தில் 19 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் இரண்டு தொடருந்துகள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதிக் கொண்டு பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
குண்டூரில் இருந்து புறப்பட்டு ராயகடா நோக்கி சென்று கொண்டு இருந்த விரைவு தொடருந்து மீது விசாகப்பட்டினத்தில் இருந்து பலாசா நோக்கி சென்ற பயணிகள் தொடருந்து மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
19 பேர் உயிரிழப்பு
கண்டகப்பள்ளி தொடருந்து நிலையம் அருகே பலாசா நோக்கி சென்று கொண்டு இருந்த பயணிகள் தொடருந்து, நின்று கொண்டிருந்த விரைவு ரயில் மீது மோதி இந்த விபத்து ஏற்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதில் 19 பேர் வரை உயிரிழந்து இருப்பதாகவும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
தொடருந்து விபத்து நடந்த பகுதியில் போதிய வெளிச்சமின்மை காரணமாக மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தொடருந்து விபத்துக்குள்ளான இடத்தில் மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும், காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யவும் ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்.