நிகழ்நிலை பாதுகாப்பு சட்ட மூலம் குறித்து சபாநாயகர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் அதிகாரபூர்வ சட்டமாக அறிவித்து கையெழுத்திடப்படுவதற்கு முன்னர் மேலும் பல சட்ட ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படும் என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்ற உத்தரவுக்கமைய சட்டவாக்கத்தின் போது உள்வாங்கப்பட்ட அனைத்து திருத்தங்களும் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் விசாரணைகளை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
கடந்த 24ஆம் திகதி இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் சபாநாயகர் இதனை அறிவித்துள்ளார்.
சபாநாயகர் கையெழுத்திடவுள்ளார்
சட்ட நடைமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கும், சாத்தியமான குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும் சட்டமா அதிபர் அலுவலகத்தினால் ஒவ்வொரு சட்டமூலமும் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படும் என்றும் சபாநாயகர் இதன்போது உறுதியளித்துள்ளார்.
மேலும், சட்டமா அதிபரினால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் நாடாளுமன்ற அதிகாரிகள் குழு இரண்டாவது மீளாய்வுகளை மேற்கொண்ட பின்னரே சபாநாயகர் கையெழுத்திடவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு கடந்த 24 ஆம் திகதி 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இணையவழி பாதுகாப்பு
இந்த சட்டமூலம் நிறைவேறியதன் ஊடாக இணையவழி பாதுகாப்பு ஆணைக்குழு ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. எவ்வாறாயினும், சபை முதல்வர் சட்டமூலம் தொடர்பான திருத்தங்களை முன்வைத்திருந்தார்.
இந்த திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றத்துக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |