ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கர்தினால் மெல்கம் வெளியிட்ட கருத்து
முன்னாள் சட்டமா அதிபர் தப்புல த லிவேரா ஒரு சாட்சியாக இல்லாமல் குற்றம் சாட்டப்பட்டவர் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் இன்று காலை இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கர்தினால் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை வரலாற்றில் இருண்ட நாட்களில் ஒன்றாகக் குறிக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு அன்று 272 உயிர்களைப் பலிகொண்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்து நான்கு ஆண்டுகள் ஆகின்றன.
பயங்கரவாதத் தாக்குதல்
இதற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கொச்சிக்கடை புனித அந்தோணியார் ஆலயத்தில் முக்கிய நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
ஏப்ரல் 21, 2019 அன்று, உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் கொண்டாடியபோது, தலைநகரில் உள்ள 03 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 03 நட்சத்திர விடுதிகளை குறிவைத்து 8 இடங்களில் 10 தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இதன்படி, பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உயிரிழந்தவர்களுக்கும் நீதி கோரி கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விசேட ஆராதனையின் பின்னர் நடைபவனி ஆரம்பிக்கப்பட்டது.
அது கொச்சிக்கடை புனித அந்தோணியார் ஆலயம் வரை தொடர்ந்தது.
நீதிக்கான அணிவகுப்பு
கத்தோலிக்க பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள், ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இளைஞர்கள் குறித்த நீதிக்கான அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.
சீதுவ அம்பலன்முல்லை கங்காராம ஆலயத்தில் பாதயாத்திரையாக வந்த மக்களுக்கு தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் பின்னர், துடெல்ல புனித அடைக்கல மாதா தேவாலயத்தை சென்றடைந்த மக்களுக்கு அங்கு தேநீர் விருந்தும் வழங்கப்பட்டது.
இந்த ஊர்வலம் இன்று காலை கொச்சிக்கடை புனித அந்தோணியார் ஆலயத்தை வந்தடைந்தது.
பயங்கரவாதத் தாக்குதலின் நான்காம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பிரதான நினைவேந்தல் நிகழ்ச்சியும் ஆராதனையும் இன்று காலை 08.00 மணியளவில் கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் ஆரம்பமானது.
நீதி கிடைக்கும் வரை விழித்திருக்கிறோம்
கொழும்பு பேராயர் மால்கம் கர்தினால் ரஞ்சித் மற்றும் வத்திக்கானுக்கான இலங்கைத் தூதுவர் பிரையன் உதய்கு ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
சீனா, அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட பல நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நினைவேந்தலின் தொடக்கத்தில், காலை 8.45 மணியளவில் முதல் தாக்குதலை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவாக நினைவுச் சின்னம் முன்பு மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டது.
முக்கிய நிகழ்ச்சியின் முடிவில், புனித ஆராதனை நடைபெற்றது, பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களும் இதில் பங்கேற்றனர்.
இதேவேளை, நீர்கொழும்பு-கொழும்பு பிரதான வீதியின் இருபுறமும் இருந்து கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திலிருந்து கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம் வரையில் 'நீதி கிடைக்கும் வரை விழித்திருக்கிறோம்' என்ற தலைப்பில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை ஈஸ்டர் தாக்குதலுக்கு இலக்கான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திலும், நாடளாவிய ரீதியில் பல தேவாலயங்களிலும் சமய நிகழ்ச்சிகளும் போராட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
