காவல்துறை அதிகாரிகளின் வருடாந்த இடமாற்றம் : வெளியான அறிவிப்பு
எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவிருந்த அனைத்து காவல்துறை அதிகாரிகளின் வருடாந்த இடமாற்றங்களை எதிர்வரும் 06 மாதங்களுக்கு இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்ற உத்தரவை நீடிப்பது தொடர்பில் இலங்கை காவல்துறை தலைமையகம் பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் (Priyantha Weerasuriya) கையொப்பத்துடன் விசேட அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மானதுங்க தெரிவித்துள்ளார்.
வருடாந்த இடமாற்றம்
இதன்படி, இந்த அறிவிப்பானது, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து காவல்துறை நிலையங்களுக்கும் நேற்று (24) அனுப்பப்பட்டுள்ளது.
இதன்படி, 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றம் எதிர்வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடமை தேவைகளின் அடிப்படையில் 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த உத்தரவு தடையாக இருக்காது என பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |