மற்றுமொரு சீக்கிய தலைவர் சுட்டுக்கொலை: கனடாவில் பதற்றம்
கனடாவில் மற்றுமொரு காலிஸ்தான் இனத்தவர் கொல்லப்பட்ட நிலையில் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனடாவில் சீக்கிய குருத்வாரா தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஏற்கனவே இந்தியா – கனடா உறவில் விரிசல் எழுந்துள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை
சீக்கியர்களுக்கு தனி நாடு கேட்டு போராடிவரும் காலிஸ்தான் அமைப்புகளில் காலிஸ்தான் புலி படை அமைப்பும் ஒன்றாகும். இதன் தலைவராக செயல்பட்டவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார்.
இவர் கனடாவில் தலைமறைவாக இருந்த நிலையில் இந்தியாவில் ஒரு சாமியாரை கொல்ல முயன்றது உள்ளிட்ட பல குற்றங்களுக்காக தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார்.
இந்த பட்டியலை இந்திய அரசு கனடாவுக்கும் அனுப்பி வைத்தது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் நிஜ்ஜார் கனடாவில் படுகொலை செய்யப்பட்டார்.
கனடா பிரதமர் குற்றச்சாட்டு
இந்த விவகாரம் குறித்து அண்மையில் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நிஜ்ஜாரை கனடா குடிமகன் என்றும், அவரை கொலை செய்ததில் வெளிநாட்டு (இந்தியா) தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக இந்திய தூதர் ஒருவரையும் அவர் வெளியேற்றியுள்ளார். பதிலுக்கு இந்தியாவும் கனடா தூதரை வெளியேற உத்தரவிட்டுள்ளது.’
பதற்றம் தணிவதற்குள்
இதனால் இரு நாடுகள் இடையேயான உறவு நிலையில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது கனடாவில் வசித்து வந்த மற்றுமொரு காலிஸ்தான் இனத்தவரான சுக்தூல் சிங் என்பவர் 2 குழுக்கள் இடையே இடம்பெற்ற துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டுள்ளார். இதனால் கனடாவில் மேலும் பதற்றம் தோன்றியுள்ளது.