சிறிலங்கா இராணுவத்தில் இருந்தவர்களுக்கு ஏற்பட்ட நிலை! மறுக்கப்படும் நுழைவு விசா: பொங்கியெழும் சரத் வீரசேகர
இலங்கையில் மற்றுமொரு யுத்தம் ஏற்பட்டால் அதனை எதிர்த்து போராடும் அளவில் சிறிலங்கா இராணுவம் உள்ளதா? என கடும்போக்குவாத நாடாளுமன்ற உறுப்பினரான சரத் வீரசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
"உலகின் மிக கொடூரமான பயங்கரவாத இயக்கத்தை இல்லாதொழித்த நாடு இலங்கை.
புலிகளின் அமைப்பை நாம் இலங்கையில் அழித்திருந்தாலும், குறித்த அமைப்பு இன்றும் வெளிநாடுகளில் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஈழம் எனும் கனவு இன்னும் அவர்களின் மனதில் உள்ளது. அந்த கனவை அவர்கள் விடுவதாக இல்லை.
மற்றுமொரு யுத்தம் ஏற்பட்டால்......
இலங்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களையும் அதன் உறுப்பினர்களையும் அந்த தடை பட்டியலில் இருந்து நீக்கியமை சரியானதா? இந்த கேள்வியை எழுப்ப நான் விரும்புகிறேன்.
இலங்கையில் மற்றுமொரு யுத்தம் ஏற்பட்டால் அதனை எதிர்த்து போராடும் அளவில் இராணுவம் உள்ளதா? அந்த தைரியம் உள்ளதா?
இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு தற்போது அமெரிக்காவுக்கு நுழைவு விசா வழங்கப்படுவதில்லை. அவரது மகளுக்கு கல்வி கற்க அமெரிக்காவில் வாய்ப்பு கிடைத்தும் செல்ல முடியாதுள்ளது.
இந்த நிலையில், சவேந்திர சில்வாவின் மகளும் யுத்தகுற்றங்களுக்கு ஆளாகியுள்ளாரா?
அத்துடன், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவுக்கு அவுஸ்ரேலியாவுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சரத் பொன்சேகாவுக்கும் அமெரிக்காவுக்கு நுழைவு விசா வழங்கப்படவில்லை. மேலும், பல இராணுவ வீரர்களுக்கு சில நாடுகளுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
யுத்த குற்றங்கள்
இலங்கைக்கு சமாதானத்தை கொண்டு வர குறித்த தரப்பினர் பாடுபட்டனர். இதுவே, அவர்கள் செய்த ஒரே குற்றம்.
இலங்கையில் காணப்பட்ட பிரச்சனைகளை நாம் ஜெனீவாவில் சரிவர வெளிக்காட்ட தவறி விட்டோம்.
கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி யுத்தத்தை நாம் நிறைவுக்கு கொண்டு வந்தோம்.
இதனை தொடர்ந்து, மே மாதம் 27 ஆம் திகதி ஜேர்மனி 17 நாடுகளுடன் இணைந்து இலங்கை யுத்தகுற்றங்களை இழைத்துள்ளதாக ஜெனீவாவில் கூறியது. எனினும், இந்த குற்றச்சாட்டை நாம் தோற்கடித்தோம்.
இதையடுத்து, ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை சிறிலங்கா இராணுவத்தை பாராட்டியிருந்தது. அத்துடன், நாம் யுத்த குற்றங்களை இழைக்கவில்லை என பலர் கூறியிருந்தனர்.
இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்தம், சர்வதேச ஆயுத மோதல் அல்ல என்பதை நாம் தெளிவுபடுத்த தவறி விட்டோம். இதுவே, எமது பாரிய தவறு" என்றார்.