பயங்கரவாத தடைச் சட்ட நடைமுறை தொடர்பில் வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட தகவல்
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தின் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், முன்னேற்றுவதற்குமான முற்போக்கான ஒரு படியாகும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தச் சட்டமூலம் 2022 ஜனவரி 27 ஆந் திகதி அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் அதனை தாக்கல் செய்யுமாறு அவைத் தலைவருக்கு அமைச்சரவை உபகுழுவின் தலைவரான வெளிவிவகார அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார் என வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை சிறந்த சர்வதேச நடைமுறைகளை பின்பற்றி நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாகவும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் முன்மொழியப்பட்ட திருத்தமானது அமைந்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
பல ஆலோசனைகளுக்குப் பின்னர், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை மற்றும் நீதித்துறை மீளாய்வுக்கு உட்பட்ட நபர்களின் உரிமைகளை முன்னேற்றுவதற்கும், பாதுகாப்பதற்கும் முன்மொழியப்பட்ட திருத்தம் வழி செய்யும் என வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
தடுப்புக் காலத்தைக் குறைத்தல், சித்திரவதைக் குற்றச்சாட்டுகளை நிவர்த்தி செய்வதற்கும் அகற்றுவதற்கும் தடுப்புக்காவலில் உள்ள சந்தேகநபர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இடங்களுக்குச் செல்ல நீதவானுக்கு வெளிப்படையாக அதிகாரம் வழங்குதல்,
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீதித்துறை மீளாய்வுக்கு அங்கீகாரம் வழங்குதல்,
தடுப்புக்காவலில் அல்லது காவலில் வைக்கப்பட்டுள்ள ஒருவரை சட்டத்தரணிகள் அணுகுவதற்கான சட்டம் மற்றும் அவ்வாறு தடுப்புக்காவலில் அல்லது தடுத்து வைக்கப்பட்டுள்ள நபரின் உறவினர்களுடன் தொடர்புகொள்வதற்கான உரிமை,
பிரசுரங்களைத் தடை செய்வது தொடர்பான விதிகளை மீளெடுத்தல்,
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான தடுப்புக் குற்றங்களுக்கு நாளாந்த அடிப்படையில் விசாரணைகளை நடத்துதல்,
தடுப்புக்காவலில் அல்லது தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு பிணை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுதல்,
வழக்குகளை விரைந்து தீர்ப்பதை உறுதிசெய்தல்,
புதிய பிரிவு 15B ஐ அறிமுகப்படுத்துவதை உறுதிப்படுத்துதல் ஆகியன முன்மொழியப்பட்டுள்ள திருத்ததில் உள்ளடக்கப்பட்டுள்ளன என வெளிவிவகார அமைச்சு மேலும் கூறியுள்ளது.

