76 ஆண்டுகளின் பின்னர் நடந்த அதிசயம்: புதிய ஜனாதிபதி தொடர்பில் முன்னாள் எம்.பி
76 ஆண்டுகளின் பின்னர் ஒரு அதிசயம் நடந்தது போல் இடதுசாரி கொள்கையில் உள்ள ஒருவர் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் ( Gnanamuthu Srineshan) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு (Batticaloa) செட்டிபாளையத்திலுள்ள அவரது இல்லத்தில் இன்று (23.09.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…. “இலங்கை சுதந்திர சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகள் கடந்து இருக்கிறது. கடந்த காலத்தில் வலதுசாரி போக்குடைய தலைவர்கள் தான் இலங்கையில் பிரதம மந்திரிகளாகவோ ஜனாதிபதிகளாகவோ, இந்த நாட்டை ஆட்சி செய்திருக்கிறார்கள்.
ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல்
ஆனால் அவர்கள் ஆட்சி செய்திருக்கின்றார்கள் நாட்டை வளப்படுத்தவில்லை 76 ஆண்டுகளின் பின்னர் ஒரு அதிசயம் நடந்தது போல் ஒரு இடதுசாரி கொள்கையில் உள்ள ஒருவர் தேர்தல் மூலமாக ஜனாதிபதியாக ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அந்த வகையில் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் என்பது ஒரு முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகின்றது. கடந்த தேர்தலில் நான்கு விதமான வாக்குகளை பெற்ற ஒரு தலைவர் தற்போது 40 வீதத்துக்கு மேலான வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக ஆட்சி பீடம் ஏறியிருக்கின்றார்.
அதாவது அனுரகுமார திசாநாயக்கா (Anurakumara Dissanayake) இடதுசாரி தலைவராக இருந்து தற்போது ஜனாதிபதியாக இலங்கையில் பதவிஏற்று இருக்கிறார்கள். கடந்த எட்டு ஜனாதிபதி தேர்தலிலும் தெரிவு செய்யப்பட்டவர்கள் இந்த நாட்டுக்கோ இந்த நாட்டில் இருக்கின்ற பிரச்சனைகளுக்கு அவர்கள் பணியாற்றியது இல்லை என்று தான் கூற வேண்டும்.
நாட்டில் மாற்றம்
எனவே அனுரகுமார திசநாயக்க அவர்களைப் பொறுத்தவரையில் அவர் ஒரு இடதுசாரி சிந்தனையில் உள்ளவர். இடதுசாரி போக்குணையுடையவர். இரண்டு தடவைகள் அவர்களின் புரட்சிகள் மூலமாக நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என நினைத்தவர்கள். ஆனால் முடியவில்லை.
இப்போது அவர் ஜனநாயக வழி மூலமாக அவர் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றார். இந்த நிலையில் இந்த நாட்டில் புரையோடிப் போயிருக்கின்ற இன பிரச்சனை உள்ளிட்ட இன்னும் பல பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய பொறுப்பு அவரிடம் இருக்கிறது.
எனவே வெற்றி பெற்று பதவியேற்றி இருக்கின்ற தலைவர் அனுரகுமார திசநாயக்க அவர்களுக்கு எனது மக்கள் சார்பாக பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தமிழ் பேசும் மக்கள்
நீங்கள் இந்த நாட்டில் நிலையான ஒரு தலைவராக தொடர்ந்தும் நீடிக்க வேண்டுமாக இருந்தால் இந்த நாட்டில் புரையோடிப் போயிருக்கின்ற இனப் பிரச்சினையை தீர்ப்பதன் மூலமாக இந்த நாட்டில் இருந்து வெளியேறிய மூளைசாலிகள் தொழில் வல்லுநர்கள் மீண்டும் இந்த நாட்டை வளப்படுத்தக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும்.
அதற்கு முதலில் செய்ய வேண்டிய விடயம் இந்த இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு நியாயமான வழியை வழியை மேற்கொள்ள வேண்டும். அந்த காலத்தில் ஆட்சி செய்த தலைவர்கள் இனப்பிரச்சனையும், இனவாதத்தையும், மதவாதத்தையும், வைத்துக்கொண்டு இந்த நாட்டை ஆட்சி செய்திருக்கின்றார்கள். அதன் மூலமாக இந்த நாடு குட்டிச்சுவர் ஆக்கப்பட்டிருக்கின்றது. பொருளாதாரத்தில் விழுந்து கிடக்கின்றது.
எனவே பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதை மாத்திரம் அல்லாமல் இந்த தேசிய இனப்பிரச்சினை தீர்ப்பதற்குரிய ஒரு சந்தர்ப்பம் உங்கள் கையில் கிடைத்திருக்கின்றது. இந்த சந்தர்ப்பத்தை முறையாக பயன்படுத்தி பிரச்சனையை தீர்த்தால் இந்த தமிழ் தேசிய மக்கள் உங்களை மறக்க மாட்டார்கள்.
அது மாத்திரமில்லாமல் இந்த நாட்டில் ஒன்பதாவது ஜனாதிபதி என்பவர் ஒரு சாதனையாளராக இந்த சரித்திர ஏட்டில் எழுதப்படக்கூடிய நிலைமை உங்களுக்கு கிடைக்கும். அந்த சந்தர்ப்பத்தை நீங்கள் செய்ய வேண்டும் என்று தமிழ் மக்கள் சார்பாக தமிழ் பேசும் மக்கள் சார்பாக உருக்கமான வேண்டுகோளை விடுக்கின்றேன்” என அவர் இதன்போது தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |