ஈழத்தமிழர்களை வஞ்சித்த அரசு: சர்வதேச மேடையில் அம்பலமான அநுரவின் இரட்டை முகம்!
ஊருக்குத்தான் உபதேசம் எனக்கல்ல என்ற ஒரு நிலைப்பாட்டில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) நகர்வது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
ஆம் சொந்த நாட்டில் ஒரு இனம் அழிந்து நீதிக்கிடைக்காமல் முடக்கப்பட்டு இருக்கின்ற நிலையில், சர்வதேச அரங்கில் இன்னொரு நாட்டிற்காக மனம் வருந்தியுள்ளார் தம் தமிழர்களின் வாக்குக்கு எஜமானராக தேர்தெடுக்கப்பட்ட அநுர குமார திஸாநாயக்க.
ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் உரையாற்றிய அநுரகுமார திஸாநாயக்க பலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிப்பதாகவும் இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து ஆதரவையும் வழங்குவதாகவும் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “அர்த்தமற்ற போரின் விளைவாக உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் பாதிப்பை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய ஒரு முக்கியமான தருணத்தை நாம் அடைந்துவிட்டோம்.
உலகைப் பாதிக்கும் மோதல்கள், மத வெறி மற்றும் மனிதகுலத்திற்குள் இனவெறி ஆகியவை கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
நீங்கள் எந்த நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தினாலும் ஒவ்வொருவரும் போரை நிராகரிப்பதில் என்னுடன் சேருவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
உலகில் எந்த நாடும் போரை விரும்பவில்லை, போர் அல்லது மோதல், அது எங்கு, எப்படி நடந்தாலும் அது ஒரு சோகம் என்பதை நாங்கள் அறிவோம்.
இப்போதும் கூட அந்த சோகத்தின் வலி உலகின் பல பகுதிகளிலும் உணரப்படுகின்றது.
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக போரின் கசப்பான அனுபவத்தை அனுபவித்த ஒரு நாடாக அதன் அழிவை நாங்கள் நன்கு அறிவோம்.
போரில் இறந்த ஆயிரக்கணக்கான மக்களின் நினைவுச் சின்னங்களுக்கு முன், அவர்களின் பெற்றோர், குழந்தைகள் மற்றும் மனைவிகள் எழுப்பிய வேதனையான வேண்டுகோள்களைப் பார்க்கும் எவரும் போரைக் கனவு காணக்கூட மாட்டார்கள்.
அந்த வேதனையான காட்சியை நம் கண்களால் பார்த்திருக்கின்றோம், காசா பகுதியில் நடந்து வரும் கொடூரமான பேரழிவு எங்கள் ஆழ்ந்த கவலைக்குக் காரணம்.
குறிப்பாக, காசா பகுதி ஒரு வேதனையான மற்றும் துயரமான திறந்தவெளி சிறைச்சாலையாக மாறியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற அனைத்து தரப்பினரின் ஒப்பந்தத்தின்படி, இரு தரப்பினரும் உடனடியாக போர்நிறுத்தம் செய்ய வேண்டும், அனைத்து மனிதாபிமான உதவிகளையும் தடையின்றி அணுக வேண்டும் மற்றும் அனைத்து தரப்பினரும் பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.
இந்த கொடூரமான கொலையை முடிவுக்குக் கொண்டுவர நாம் வலுவான அழுத்தத்தை செலுத்த வேண்டும்” என அவர் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு இன்று பலஸ்தீனத்திற்காக சர்வதேச மேடையில் குரல் எழுப்பிய அநுர குமார திஸாநாயக்க அரசாங்கம்தான் தமது நாட்டில் பலஸ்தீன சார்பு ஸ்டிக்கர் ஒட்டிய ஒரு இளைஞரையும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் கைது செய்தது.
ஸ்லேவ் ஐலண்ட் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகத்தில், காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இளைஞர் ஒருவர் ஸ்டிக்கர்களை ஒட்டியிருந்தார்.
இதனால் ஏப்ரல் 22 ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து அவர் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து, எழுந்த கண்டனங்கள் மற்றும் எதிர்ப்புக்களையடுத்து அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறான நிலையில், இன்று அநுர குமார திஸாநாயக்க பலஸ்தீனுக்கு ஆதரவாக தெரிவித்துள்ள கருத்து பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
பலஸ்தீன் மக்களின் சட்டம், பாதுகாப்பு, மற்றும் மனிதாபிமான உணர்வுகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதும் அதற்காக குரல் எழுப்ப வேண்டியது கட்டாயம் என்பதிலும் எந்த மாற்று கருத்துக்களும் இல்லை.
ஆனால், சர்வதேச அரங்கில் சொந்த நாட்டிற்கு அந்நாட்டின் ஜனாதிபதி குரல் எழுப்பாமை என்பதும் பெரிதும் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது.
காசா பகுதியில் நடந்து வரும் கொடூரமான பேரழிவு ஜனாதிபதிக்கு ஆழ்ந்த கவலைக்குக் காரணமாக அமைகின்றது என்றால், காலம் தொட்டு பரிதவிக்கும் நம் நாட்டு சொந்தங்களின் கண்ணீர் இங்கு வேடிக்கையாகின்றதா ?
அங்கு கொல்லப்படும் மக்களுக்கு நீதி உரிதென்றால், போர் என்ற போர்வையில் நம் நாட்டில் கொத்து கொத்தாக சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கும் நீதி உரித்தானது தானது இல்லையா ?
தேர்தல் காலத்தில் உறவுகளை தொலைத்து நிர்கதியாக்கப்பட்ட தாய்களுக்கும் மற்றும் குடும்பங்களுக்கு பதில் பெற்று தருவேன் என மேடை மேடையாய் தெரிவித்த அநுர குமார திஸாநாயக்க, இன்று சர்வதேச ரீதியில் ஒரு மேடை கிடைத்தும் அதில் பூசி மொழுகும் படியாக கருத்து தெரிவித்திருப்பது தமிழ் மக்களை விரக்தியில் ஆழ்த்தியுள்ளது.
ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலையை எதிர்த்து பலஸ்தீனத்துக்காக கண்ணீர் வடிக்கும் போலி முற்போக்குகள் போல் இதுவும் ஒரு இரட்டை நிலைப்பாடுதான் என கருத்தப்படுகின்றது.
ஈழத்துக்காக குரல்கொடுத்தால் அது பிற்போக்கு, பலஸ்தீனத்துக்காக குரல்கொடுத்தால் அது முற்போக்கு என்ற தவறான தாரக மந்திரத்தை மீண்டும் மீண்டும் இலங்கை அரசியல்வாதிகள் வெளிப்படுத்திக் கொண்டிருப்பது இன்று மறுபடியும் ஒரு முறை திரையிட்டு காண்பிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, உண்மையான மனிதாபிமான அரசியல் என்பது இவர்களுக்கு சர்வதேச அரங்கில் கிடைக்கும் கைத்தட்டலுக்காக மட்டுமே தவிர தம் நாட்டின் துயரங்களை மறைக்கும் வெரும் முகமூடியாகவே மாத்திரமே விளங்குகின்றது என்பது இங்கு அம்பலமாகியுள்ளது.
பலஸ்தீனத்துக்காக ஒலித்த இந்த குரல், ஈழத்துக்காக நிசப்தம் ஆகும் போது அது உண்மையான நீதிக்குரலா அல்லது வெறும் வெற்று நடிப்பா என்ற ரீதியிலும் சந்தேகங்களை எழுப்புக்கின்றது.
உண்மையில் மனித உரிமை மற்றும் ஜனநாயக உரிமைகள் என்பவை ஒரு நாட்டுக்காக மட்டுமல்ல, உலகின் அனைத்து மக்களுக்கும் சமமாக இருக்க வேண்டிய அடிப்படைகள்.
இருப்பினும், இலங்கை அரசியலில் அந்த அடிப்படைகள் வெளிநாட்டு மேடையில் பேசுவதற்கான கருவிகளாகவே பயன்படுத்தப்படுவதுடன் நாட்டினுள் அவை எப்போதும் மௌனிக்கப்பட்டே காணப்படுகின்றது.
இது ஈழத்தமிழர்கள் மத்தியில்,
- பலஸ்தீன மக்களின் உயிரும் கண்ணீரும் மதிப்புக்குரியது என்றால், தமிழர் மக்களின் உயிரும் கண்ணீரும் ஏன் மதிப்புக்குரியதல்ல ?
- காசா ஒரு திறந்தவெளி சிறைச்சாலை என தெரிவித்த அநுர குமார திஸாநாயக்க , யாழ்ப்பாணம், வவுனியா, முள்ளிவாய்க்கால் களங்களில் மற்றும் வடக்குக் கிழக்கு முழுவதிலும் இன்னமும் நீடிக்கும் இராணுவ முகாம்களை ஏன் கண்டுகொள்ளவில்லை ?
- காசாவின் சுவர்கள் உடைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் அரசியல், ஈழத்தின் அடக்குமுறைச் சுவர்களுக்கு முன் ஏன் மௌனமாகின்றது ?
என பலதரப்பட்ட கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதனால், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் பலஸ்தீன உரை, உலகளாவிய நீதிக்குரல் என்ற முகமூடியை அணிந்திருந்தாலும் தமிழ் மக்களின் நினைவில் அது வெற்று அரசியல் மேடை நாடகமாகவே பதிவாகியுள்ளது.
ஏனெனில், உண்மையான முற்போக்கு அரசியல், பிற நாட்டின் துயரத்துக்காக மட்டுமல்ல தம் சொந்த மக்களின் வரலாற்றுத் துயரத்துக்காகவும் குரல் கொடுக்கும் அரசியல் தான்.
அதை செய்யாத அரசியல், எத்தனை பெரிய மேடைகளில் பேசினாலும் இறுதியில் முகமூடி அரசியல் என்ற பெயரையே பெறும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை.
விடியலுக்காக ஆண்டு ஆண்டுகளாக காத்திருக்கும் தமிழ் மக்களை இந்த அரசாங்கமும் ஏறி மிதித்து செல்வது என்பது மக்களின் மத்தியில் ஆகப்பெரிய விரக்தியையும் மற்றும் ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

