திடீரென தமிழர்கள் மீது கரிசனை காட்டும் ஜே.வி.பி - ராஜபக்சர்களுக்கும் ஆலோசனை
தமிழ் மக்களின் எதிர்பார்ப்பான அரசியல் பிரச்சினைக்கு முதலில் தீர்வு காண வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake ) தெரிவித்துள்ளார்.
'அரசியல் தீர்வு மாத்திரம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் அல்ல. அதைவிட அவர்களின் அத்தியாவசிய தேவைகளைத் தீர்ப்பதே முக்கியம். அவற்றைத் தீர்த்து வைப்பது தொடர்பிலேயே முதலில் நாம் கவனம் செலுத்துகின்றோம்' என்று நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்திருந்த நிலையில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது. தமிழ் மக்களின் பிரதான எதிர்பார்ப்பான அரசியல் பிரச்சினைக்கு முதலில் தீர்வு காணப்பட வேண்டும்.
மக்கள் விடுதலை முன்னணி ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டே தீரும். தமிழர் பிரதிநிதிகளையும் எமது அரசில் இணைத்துப் பயணிப்போம்.
ராஜபக்ச அரசாங்கம் தமிழ் மக்களைப் புறக்கணித்து - அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் இருந்தபடியால் தான் நாடு இன்று சர்வதேசத்திடம் மண்டியிட வேண்டிய நிலைக்கு வந்துள்ளது.
தமிழ் மக்களுக்கு எதிராகக் குற்றங்களை இழைத்த ராஜபக்ச அரசாங்கம், அதற்கான பொறுப்பை ஏற்றுப் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பரிகாரம் வழங்கியிருந்தால் இலங்கை விவகாரத்தில் ஐ.நாவும் சர்வதேச நாடுகளும் தலையிட்டிருக்க வேண்டிய நிலை வந்திருக்கமாட்டாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
