மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அநுர
இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சமீபத்தில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் (Narendra Modi) இன்று (25) பிற்பகல் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது ஜனாதிபதி இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்திய மக்களுடன் சகோதரத்துவம்
இரு நாட்டுத் தலைவர்களும் சுமார் பதினைந்து நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அறிந்து தான் மிகவும் அதிர்ச்சியடைந்ததாகக் கூறிய ஜனாதிபதி, இலங்கை எப்போதும் இந்திய மக்களுடன் சகோதரத்துவத்தால் பிணைக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
உலகில் எங்கு பயங்கரவாதம் நடந்தாலும், அதை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் நம்பிக்கை
இந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இலங்கை அரசு மற்றும் மக்களின் இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட ஜனாதிபதி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய சூழ்நிலையால் உருவாகியுள்ள பதற்றமான சூழ்நிலை விரைவாக தீர்க்கப்பட்டு பிராந்திய அமைதி நிலைநாட்டப்படுவதைக் காண்பதே இலங்கையின் நம்பிக்கை என்று ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
