வரி செலுத்துவோருக்கு விசேட சலுகை : வெளியான மகிழ்ச்சித் தகவல்
இலங்கையில் வரி செலுத்துவோருக்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விசேட சலுகைத் திட்டம் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, தமது வரிப் பொறுப்புக்களைத் துல்லியமாகவும், தொடர்ச்சியாகவும் நிறைவேற்றும் வரி செலுத்துவோரை கௌரவிப்பதற்காக "வரி செலுத்துவோர் வரப்பிரசாத அட்டைத் திட்டத்தை" (Taxpayer Privilege Card Scheme) உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.
இந்தத் திட்டமானது, தனிநபர் வரி செலுத்துவோர் தாமாக முன்வந்து வரி செலுத்துவதை ஊக்குவிப்பதையும், வரி ஏய்ப்பைக் குறைப்பதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.
முக்கிய நிபந்தனைகள்
அத்தோடு, நாட்டிற்கு அதிக பங்களிப்பு வழங்கும் வரி செலுத்துவோருக்கு உரிய அங்கீகாரத்தை வழங்குவதும் இதன் இலக்காகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தச் சலுகை அட்டையைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பதாரர்கள் சில முக்கிய நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் வருமான வரி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வரிகளும் உரிய திகதிக்கு முன்னரோ அல்லது திகதியன்றோ செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் கடந்த கால வரி இணக்கத்தன்மை வரலாறானது சீரானதாகவும், ஏற்றுக்கொள்ளத்தக்க வகையிலும் அமைந்திருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சலுகை அட்டைகள்
இந்தச் சலுகை அட்டைகள் இரண்டு பிரிவுகளின் கீழ் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலாவது தங்க அட்டை (Gold Card), கடந்த மதிப்பீட்டு ஆண்டில் 5 மில்லியன் ரூபாய் அல்லது அதற்கு மேல் வருமான வரி செலுத்தியவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இரண்டாவது வெள்ளி அட்டை (Silver Card), கடந்த மதிப்பீட்டு ஆண்டில் 3 மில்லியன் முதல் 5 மில்லியன் ரூபாய் வரை வருமான வரி செலுத்தியவர்கள் இதற்குத் தகுதியுடையவர்கள் .
இந்தத் திட்டத்தில் இணைய ஆர்வமுள்ள தகுதியான வரி செலுத்துவோர், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான www.ird.gov.lk ஊடாக விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு 2026 பெப்ரவரி 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வலுசேர்க்கும் நேர்மையான வரி செலுத்துவோருக்குக் கிடைக்கும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |