தமிழர் பகுதியில் கொண்டாடப்பட்ட அநுரவின் வெற்றி
வவுனியா
வவுனியா தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார் திஸாநாயக்க இன்றையதினம் ஜனாதிபதியாக பதவியேற்றமையை அடுத்து வவுனியாவில் அக்கட்சி ஆதரவாளர்கள் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த சம்பவமானது வவுனியா இரட்டைபெரியகுளத்தில் இடம்பெற்றிருந்தது இதன்போது பொதுமக்களுக்கு பால் சோறு வழங்கி இருந்தனர்.
மன்னார்
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவு செய்யப்பட்டு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் இன்று திங்கட்கிழமை காலை (23) பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில் மன்னாரில் இன்றைய தினம் திங்கட்கிழமை(23) காலை 11.30 மணியளவில் ஆதரவாளர்களினால் வெற்றிக் கொண்டாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் பஜார் பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் (National People's Power) மன்னார் மாவட்ட கிளையினால் வெற்றி கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன் போது பொங்கல் பொங்கி மக்களுக்கு வழங்கப்பட்டு தமது வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடினர்.
இதன் போது அவர் வாக்குறுதி வழங்கிய மன்னார் மாவட்டத்தில் உள்ள சில பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு வழங்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தனர். குறித்த நிகழ்வில் ஆதரவாளர்கள் மக்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கிண்ணியா
இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டதையடுத்து இன்று (23) பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
கிண்ணியா புஹாரியடி சந்தியில் கட்சி ஆதரவாளர்கள் இன்று (23) திசை காட்டி வடிவிலான கேக் கினை வெட்டி வெற்றிக் களிப்பில் ஈடுபட்டனர். இதில் கட்சி ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணம்
அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) வெற்றி பெற்றதை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் ஆதரவாளர்கள் வெற்றியை கொண்டாடியுள்ளார்கள்.
குறித்த வெற்றிக்கொண்டாட்டமானது, இன்றைய தினம் (23) இடம்டபெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் காரியாலயத்தில் இன்று காலை பொங்கல் பொங்கி அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றியை ஆதரவாளர்கள் கொண்டாடியுள்ளார்கள்.
இதன்போது பொதுமக்களுக்கு பொங்கல் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.
கொண்டாடப்பட்ட வெற்றி
இதேவேளை, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு (Anura Kumara Dissanayake) அவரது ஆதரவாளர்கள் பலர் காலிமுகத்திடல் பகுதியில் திரண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
நாடு அநுரவிற்கே என்ற வாசகம் அடங்கிய பதாதைகள் மற்றும் இலங்கையின் தேசியக் கொடியுடன் உற்சாகமான வரவேற்பை வழங்கியுள்ளனர்.
மேலும், புதிய ஜனாதிபதியான அநுரவிற்கு ஆதரவான கோசங்களையும் எழுப்பி தமது மகிழ்ச்சியை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை
இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்றதனை தொடர்ந்து தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட ஆதரவாளர்கள் இன்று வெற்றியை கொண்டாடும் முகமாக நகரின் மத்தியில் வெற்றிக் களிப்பில் ஈடுபட்டனர்.
பால் சோறு பகிர்ந்தும் நகரின் மத்தியில் வேட்டுச் சத்தங்களுடன் தமது வெற்றியை
மற்றவர்களுடனும் பகிர்ந்துகொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |