ஜப்பானுக்கு பறக்கவுள்ள ஜனாதிபதி அநுர
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜப்பானுக்கு (Japan) விஜயம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் (Vijitha Herath) உட்பட அதிகாரிகள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இம் மாதம் 22 ஆம் திகதி அளவில் இடம்பெறவுள்ள இந்த விஜயத்தின் போது இருநாட்டு பொருளாதார ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சருடன் சந்திப்பு
அத்துடன், வெளியுறவுத் துறைக்கான ஜப்பான் நாடாளுமன்ற துணை அமைச்சர் இகுய்னா அகிகோவை (IKUINA Akiko) சந்தித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத், இருநாடுகளுக்கு இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடி இருந்தார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 58வது அமர்வின் பக்க நிகழ்வாக இடம்பெற்ற சந்திப்பின் போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஜப்பான் விஜயம் குறித்தும் பேசப்பட்டுள்ளது.
சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் இலக்கை அடைவதில் ஜப்பானுக்கு ஒரு முக்கிய பங்காளியாக இலங்கை உள்ளது என்றும், பிராந்தியம் முழுவதும் ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை அடைய இலங்கையடன் தொடர்ந்து இணைந்து பணியாற்ற ஜப்பான் விரும்புவதாக இதன்போது இகுய்னா அகிகோ குறிப்பிட்டிருந்தார்.
திட்டங்களை மீண்டும் ஆரம்பித்தல்
இலங்கை மக்களைக் கருத்தில் கொண்டு ஜப்பான் தொடர்ந்து ஒத்துழைப்பை வழங்கும் என்றும், நிறுத்தப்பட்ட பல திட்டங்களை மீண்டும் இலங்கையில் ஆரம்பிக்க உள்ளோம் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) ஒப்புக்கொண்ட சீர்திருத்தங்கள் நிலையான முறையில் செயற்படுத்தப்படுவதையும், முழுமையான பொருளாதார வளர்ச்சிக்கான பாதையில் நிலையான முன்னேற்றத்தையும் ஜப்பான் ஆவலுடன் எதிர்நோக்குவதாகவும் துணை அமைச்சர் இகுய்னா அகிகோ கூறினார்.
இதற்கு பதிலளித்த விஜித ஹேராத், ஜப்பான் இலங்கைக்கு நீண்டகாலமாக அளித்து வரும் ஆதரவிற்கும், அரசியல், பொருளாதாரம் மற்றும் மக்களிடையேயான பரிமாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புகளுக்கும் நன்றி தெரிவித்தார்.
எனினும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஜப்பான் விஜயத்திற்கான திகதி இவ்வாரம் தீர்மானிக்கப்பட உள்ளதுடன், அதனை தொடர்ந்து ஐரோப்பாவிற்கான விஜயத்தில் ஜனாதிபதி பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 5 நாட்கள் முன்
