இந்தியாவுடன் அநுர அரசின் இரகசிய ஒப்பந்தங்கள்: பகிரங்கப்படுத்த நாமல் கோரிக்கை
இந்தியாவுடன் அநுர (Anura) அரசாங்கம் இரகசியமாக செய்துகொண்ட ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
சிலாபம் (Chilaw) பகுதியில் நேற்று (23) நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “159 பெரும்பான்மை பலம் உள்ளது என்பதால் இந்த அரசாங்கம் எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பதில்லை. தன்னிச்சையாக செயற்படுகிறது.
தேர்தல் விஞ்ஞாபனம்
பெரும்பான்மை பலம் எம்மிடமும் இருந்தது. ஆகவே அதிகாரம் என்பது நிலையற்றது என்பதை அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
தேசிய மக்கள் சக்தி தேர்தல் விஞ்ஞாபனத்தில் பல வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கியது. அந்த வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்த முதல் வருடத்திலேயே நிறைவேற்றுவதாக குறிப்பிடப்பட்டது. ஆனால் இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அந்த வாக்குறுதிகள் குறிப்பிடப்படவில்லை.
தேர்தல் மேடைகளில் குறிப்பிட்ட வாக்குறுதிகள் கூட வரவு செலவுத் திட்டத்தில் உள்வாங்கப்படவில்லை. அனைத்து விடயங்களிலும் பொய் மாத்திரமே மிகுதியாகியுள்ளது. தேர்தல் வெற்றிக்காக நாங்கள் மக்களுக்கு பொய்யுரைக்கவில்லை. முடிந்ததை மாத்திரம் குறிப்பிட்டோம்.
நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பித்தல்
அரச நிர்வாகத்தில் நாட்டு மக்கள் மத்தியில் வெளிப்படைத் தன்மையுடன் செயற்படுவதாக அரசாங்கம் குறிப்பிட்டது. ஆனால் இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களை அரசாங்கம் இன்றுவரையில் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கவில்லை.
இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களை அரசாங்கம் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும். ஒப்பந்தங்களில் உள்ள விடயங்களை அறிந்துகொள்ளும் உரிமை நாட்டு மக்களுக்கு உண்டு. நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்களை மூடிமறைப்பதற்கு இடமளிக்கப் போவதில்லை“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
