அநுர அரசுக்கும் ஊழலுடன் தொடர்பா... கேள்வியெழுப்பும் சுமந்திரன்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையிலான புதிய அரசும் ஊழலுடன் சம்பந்தப்பட்டு இருக்கின்றது போல் தெரிகின்றதாக தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் (Jaffna) நேற்று (31) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது மதுபானசாலை அனுமதிப்பத்திர விவகாரம் தொடர்பான கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் " மதுபானசாலை அனுமதிப்பத்திர விவகாரத்தில் தாம் ஆட்சிக்கு வந்து மூன்று நாட்களில் அதன் பெயர் விபரங்களை வெளியிடுவதாகத் தேசிய மக்கள் சக்தியினர் (NPP) கூறியிருந்தார்கள்.
ஊழலுடன் சம்பந்தம்
ஆனால், இந்த விடயத்தில் இதுவரை எந்த விபரங்களையும் அவர்கள் வெளியிடவில்லை. நானும் அந்த விபரத்தை வெளியிடுமாறு பகிரங்கமாகக் கேட்டிருந்தேன்.
அதுமட்டுமின்றி அந்த விபரங்களை வெளியிடாவிட்டால் நீங்களும் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டதாகவே சந்தேகம் வருகின்றது என்றும் சொல்லியிருந்தேன்.
ஆனால், இப்போது அந்தச் சந்தேகம் விலகி விட்டது. ஆகவே அவர்களும் ஊழலில் சம்பந்தப்பட்டு இருக்கின்றார்கள் போல்தான் தெரிகின்றது.
உண்மையில் அப்படி இல்லையெனில் ஏன் இன்னமும் வெளியிடாமல் இருக்கின்றார்கள்? " என சுமந்திரன் கேள்வியெழுப்பினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |