ஜனாதிபதி அநுரவின் பேச்சு : தேர்தல் ஆணைக்குழு கடிதம் அனுப்பியதா..!
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி(npp) ஆட்சியை கைப்பற்றும் சபைகளுக்கு நிதி வழங்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க(anura kumara dissanayake) பகிரங்கமாக தெரிவித்தமை பல்வேறு சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தது.
எனவே அவரின் இவ்வாறான கருத்து தேர்தல் சட்டத்தை மீறுவதாக அமைந்துள்ளதாக தெரிவித்து தேர்தல் ஆணைக்குழு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
தமிழர் பகுதி தேர்தல் பிரசார கூட்டத்தில் அநுர பேச்சு
மன்னார்(mannar) மற்றும் திருகோணமலை(trincomalee) கந்தளாய் பகுதியில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும்போது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
எனினும் அவர் தெரிவித்த கருத்து அரசியல் ரீதியாக சில முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும் என்பதால், இதுபோன்ற கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு ஜனாதிபதிக்கு அறிவுறுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்தார்.
அனுப்பப்பட்ட கடிதம்
தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளால் தேர்தல் ஆணைக்குழுவுக்கு செய்யப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த கடிதம் அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்.
ஜனாதிபதியின் பேச்சு உள்ளூராட்சித் தேர்தல் சட்டத்தின் பிரிவுகள் 92C (தவறான செல்வாக்கு) மற்றும் 82D (அதிகபட்ச நன்மைக்கான வாக்குறுதிகள்) ஆகியவற்றின் தெளிவான மீறலாகும் என்று கண்காணிப்பு அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

நிதியை வைத்து தமிழரை அடிபணியச் செய்ய முயற்சி: அநுர அரசு மீது தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றச்சாட்டு
சமாளிக்கும் அநுர
இதேவேளை உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து தாம் வெளியிட்ட கருத்து எதிர்க்கட்சிகளால் தவறாக விளங்கிக்கொள்ளப்பட்டதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
மத்திய அரசு கவனமாக சேகரித்த நிதியை ஊழல் நிறைந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்க மாட்டோம் என்று மட்டுமே கூறியதாகவும், தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள மன்றங்களுக்கு மட்டும் நிதி வழங்கப்படும் என கூறவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
