எரிபொருள் இறக்குமதிக்கான ஏகபோக உரிமை இரத்து - அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் ரணில்
எந்தவொரு திறமையான நிறுவனத்திற்கும் வாய்ப்பு
எரிபொருள் இறக்குமதிக்கான ஏகபோகத்தை மாற்றுவதன் மூலம் எந்தவொரு திறமையான நிறுவனத்திற்கும் எரிபொருள் இறக்குமதி செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (29) பிற்பகல் பத்திரிகை ஆசிரியர்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி செய்திப் பணிப்பாளர்களுடனான சந்திப்பின் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை, எரிபொருள் நெருக்கடியை தீர்க்க எடுக்கப்பட்டுள்ள அவசர நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்தும் பிரதமர் ஊடகங்களுக்கு விளக்கமளித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,
தற்போது பெரும் போட்டி
“ஐரோப்பாவுக்கு எரிவாயு மற்றும் எரிபொருள் விநியோகம் செய்வதை ரஷ்யா நிறுத்திவிட்டது.இப்போது மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள எரிபொருளை எல்லாம் ஐரோப்பா வாங்குகிறது.அதுமட்டுமின்றி சீனா, இந்தியா, ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளும் அங்கு எரிபொருள் வாங்க வருகின்றன.இந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என இந்தியா இதுவரை முடிவெடுக்கவில்லை. இதனால் தற்போது பெரும் போட்டி நிலவுகிறது.
சரியான பாதையை தேர்ந்தெடுக்காவிட்டால்
ரஷ்யாவின் எரிபொருள் விநியோகம் சிறிதளவே நடைபெறுகிறது.இந்த சூழ்நிலையில் நாம் நடுவில் நிற்கிறோம். இந்த நிலையில் நாம் சரியான பாதையை தேர்ந்தெடுக்காவிட்டால் அடுத்த முறை முறை நாம் இன்னும் பின் தள்ளப்படுவோம்.
எனவே நிறுவனங்களின் ஏகபோகத்தை மாற்றியுள்ளோம். எந்த நிறுவனமும் எரிபொருள் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
